சென்னை :நீட்தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பினார்.
இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக சமூக நீதி கூட்டமைப்பு என்ற பெயரில் சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று (பிப்.5) நடைப்பெற்றது. இதில், பாஜக, அதிமுக தவிர பாமக, விடுதலை சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட 11 கட்சிகள் பங்கேற்றன.
இந்நிலையில், நீட் தேர்வு ரத்துக்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளார் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் “ நீட் தேர்வு ரத்து குறித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்துகள் ஏற்கனவே தமிழ்நாடு சட்டப் பேரவையிலும், 8.1.2022 அன்று நடைபெற்ற சட்டப்பேரவை அணைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை 'நீட்' தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. எனயே தேர்வு நீட் தேர்வு ரத்து தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து சட்டப்படியான நடவடிக்கையையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆதரிக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.”எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : நீட் விலக்கு மசோதா 8 கோடி மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்