சென்னை: ராமநாதபுரம் மாவட்ட ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 300-க்கும் குறைவான படகுகளில் ஜூலை 17ஆம் தேதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். மீனவர்கள் தனுஷ்கோடிக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் ராட்சத விளக்குகளைக் கொண்டு அச்சுறுத்தி விரட்டியடித்துள்ளனர்.
பின்னர் அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் வலைகளை வெட்டி சேதப்படுத்தியதால், மீனவர்கள் மீன் பிடிக்காமல் நஷ்டத்துடன் கரை திரும்பினர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிப்புத் தெரிவித்துவருகின்றனர்.
இன்னல்களை சந்தித்துவரும் மீனவர்கள்
இது தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அந்நியச் செலாவணியை ஈட்டுவதிலும், புரதச் சத்துள்ள உணவைப் பெருக்குவதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் தொழில் மீன்பிடித் தொழில் என்றாலும், அந்தத் தொழிலை மேற்கொண்டுவரும் தமிழ்நாடு மீனவர்கள் பல்வேறு இன்னல்களை, குறிப்பாக இலங்கை கடற்படையினரால் சந்தித்துவருகிறார்கள்.
எனவே, மீன் உற்பத்தியினைப் பெருக்குவது என்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வதும் தமிழ்நாடு அரசின் கடமையாகும். மீன்பிடித் தடைக்காலம் முடிந்து, கடந்த மாதம் 30ஆம் தேதி அன்றுதான் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.