தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’அரசியல் கண்ணோட்டம் தவிர்த்து போக்குவரத்து தொழிலாளர்களை ஒரே மாதிரியாக நடத்த வேண்டும்’ - ஓபிஎஸ் அறிக்கை - போக்குவரத்து தொழிலாளர்களை ஒரே மாதிரியாக நடத்த வேண்டும்

அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்த்து, வித்தியாசமின்றி பணிகளை ஒதுக்குமாறு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கோரியுள்ளார்

Ops
Ops

By

Published : Jul 7, 2021, 6:24 PM IST

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில், பழிவாங்கும் நிலைமை என்ற பேச்சுக்கே இடமில்லாத சூழ்நிலை, அரசு போக்குவரத்துக் கழகங்களில் நிலவியது.

தொழிலாளர்கள் எந்தச் சங்கத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களை இடமாறுதல் செய்யாமல் அவர்களுக்கு வழித்தட பணியாணை (Route Posting) வழங்கப்பட்டதோடு, உடல் நலம் குன்றியவர்களுக்கு இலகுவான பணிகள் வழங்கப்பட்டன.

இதன் காரணமாக திமுக தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தைச் சார்ந்த உறுப்பினர்களும் பயனடைந்தார்கள். தொழிலாளர்களை தொழிலாளர்களாக பாவித்த அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற அரசு.

ஆனால், தொழிலாளர்களை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கின்ற அரசாக தற்போதைய திமுக அரசு விளங்குவதாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.

அண்ணா தொழிற்சங்கத்தை சார்ந்த நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் வழித்தட பணியாணை மறுக்கப்படுவதாகவும், அவர்களைவிட பணியில் இளையவராக உள்ளவர்களுக்கு வழித்தட பணியாணை வழங்கப்படுவதாகவும், எவ்வித காரணமுமின்றி அவர்கள் பணிமனை மாற்றம் செய்யப்படுவதாகவும், சில நேர்வுகளில் பணிவழங்க மறுப்பதாகவும், பணிக்கு வரும் மூத்தத் தொழிலாளர்களுக்கு வருகைப் பதிவு கூட வழங்காமல் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவதாகவும், அண்ணா தொழிற்சங்கம் பயன்படுத்தி வந்த சங்க அலுவலகங்களை வலுக்கட்டாயமாக திமுகவினர் எடுத்துக் கொள்வதாகவும் அண்ணா தொழிற்சங்கத்தை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டின் அடித்தளமாக, ஆணிவேராக விளங்கும் தொழிலாளர்களை அவர்கள் சார்ந்திருக்கும் தொழிற்சங்கத்தின் அடிப்படையில் பிரித்துப் பார்த்து, அவர்கள் அண்ணா தொழிற்சங்கத்தை சார்ந்தவர்களாக இருந்தால் அவர்களை பழிவாங்குவது என்பது தொழில் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், தொழில் உறவை சீர்குலைப்பதாகவும் அமையும்.

எனவே, அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்த்து, வித்தியாசமின்றி பணிகளை ஒதுக்கவும், பணியிட மாற்றம், இலகுப் பணி பதவி உயர்வு என அனைத்தும் விதிகளுக்குள்பட்டு நடைபெறவும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:5ஆம் வகுப்புக்கு ரூ.48,840 கட்டணம் - அதிர்ச்சியில் பெற்றோர்

ABOUT THE AUTHOR

...view details