இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் இன்று (நவ.7) வெளியிட்ட அறிக்கையில், '"மூன்றரை லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்”, “புதிதாக இரண்டு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்" என்றெல்லாம் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திமுக; பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு விற்கும்போது, அதனை எதிர்த்து குரல் கொடுத்து தனியார்மயத்தின் எதிர்ப்பாளர்போல் காட்டிக்கொண்டு ஆட்சிக்கு வந்த திமுக; ஆட்சிக்கு வந்த பிறகு அரசுப் பணிகளையே தனியார்மயமாக்கிக் கொண்டிருக்கின்றதைப் பார்க்கும்போது "பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு, கொள்கை என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி, பதவிக்காக கொள்கையைத் துறக்கக்கூடாது" என்ற பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது தெள்ளத்தெளிவாகிறது.
பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியை தலைகீழாக பின்பற்றும் நிலைக்கு, பதவிக்காக, தன்னலத்திற்காக எதையும் செய்யத் தயார் என்ற நிலைக்கு திமுக வந்துவிட்டது என்பதையே அண்மைக்கால தி.மு.க. உணர்த்துகின்றன. அரசின் நடவடிக்கைகள் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே தனியார்மயம் தலைவிரித்து ஆடுகிறது.
சென்னை குடிநீர் வாரியத்தின் பணிகளை திமுக அரசு தனியாருக்கு தாரை வார்த்ததை எதிர்த்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியபோது, தொழிலாளர்களுக்கு ஆதரவாக நான் அறிக்கை வெளியிட்டேன். ஆனால், திமுக மவுனம் சாதித்தது.
தற்போது, சென்னை பெரு மாநகராட்சி தவிர்த்து, 20 மாநகராட்சிகளில் உள்ள பணிகளை வெளிமுகமை, அதாவது Outsourcing மூலம் மேற்கொள்ள திமுக அரசு ஆணை பிறப்பித்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது. இந்த ஆணையில் 35,000-க்கும் மேற்பட்ட நிரந்தரப்பணியிடங்களை 3,500 பணியிடங்களாக குறைத்துள்ளதாகவும், தற்போது பணியாற்றி வரும் பணியாளர்கள் ஓய்வுபெற்றபின் அந்தப் பணியிடங்களை நிரப்பக்கூடாது என்றும்; அந்தப் பணிகள் வெளிமுகமை மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இதனைக்கண்டித்து, போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.