சென்னை: இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் தேர்வு ரத்து செய்ய திமுக இறுதிவரை போராடும் என்று முதலமைச்சர் அறிவித்து இருப்பதைப் பார்க்கும்போது, இந்தப் பிரச்சனை இப்போது முடிவுக்கு வராது என்பது சூசகமாகத் தெரிகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றுதான் அதன் தலைவர்கள் தேர்தலின்போது மேடைக்கு மேடை முழங்கினார்கள்.
அதை நம்பித்தான் திமுகவிற்கு மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், இன்றைக்கு ஆட்சிக்கு வந்தவுடன், அதிமுக என்ன வழியைப் பின்பற்றியதோ அதே வழியைத்தான் திமுகவும் பின்பற்றி இருக்கிறது. அதாவது, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
இந்த வாதத்தை அதிமுக முன்வைத்தால், இதற்காக குழுவை அமைத்து, அதன் பிறகு தான் சட்டமுன்வடிவினை நிறைவேற்றினோம் என்று திமுக கூறக்கூடும். ஆனால், அந்தக் குழுவிற்கு எந்த சட்ட அங்கீகாரமும் கிடையாது. வெறும் சம்பிரதாயத்திற்காக இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்றே மக்கள் கருதுகிறார்கள்.
முதலமைச்சர் சட்டப் போராட்டத்தை அரசு தொடங்கிவிட்டது என்று சொல்லும்போது, அவருக்கே இந்தச் சட்டமுன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்காதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று தான் மக்கள் நினைக்கிறார்கள்.