சென்னை: அதிமுகவின் ஒற்றைத் தலைமை யுத்தத்தில் ஈபிஎஸ் வென்றதையடுத்து அடுத்தகட்டமாக பொதுச்செயலாளர் தேர்தலை வருகின்ற 26ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர். கடந்த மாதம் 24ஆம் தேதி ஓபிஎஸ்ஸின் தாயார் பழனியம்மாள் வயது மூப்பின் காரணமாக காலமானார். அன்றில் இருந்து தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் ஓபிஎஸ் இருந்தார்.
அங்கிருந்து பல அரசியல் நகர்வுகளை மேற்கொண்ட அவர், நேற்று (மார்ச் 16) இரவு சென்னைக்கு வந்தார். ஓபிஎஸ்ஸின் தாயார் மறைந்த அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பாக ஐ. பெரியசாமி அங்கு சென்று மரியாதை செலுத்தி வந்தார். இந்த நிலையில் சென்னை வந்த ஓபிஎஸ்ஸை சந்தித்து முதலமைச்சர் தனது ஆறுதலை தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "ஓபிஎஸ்ஸின் தாயார் மறைவிற்கு ஆறுதல் தெரிவித்தோம்" எனக் கூறினார். இதன் தொடர்ச்சியாக சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தனது வீட்டில் நூற்றுக்கணக்கான பெண்களுக்கு ஓ. பன்னீர்செல்வம் இலவச சேலைகளை வழங்கினார்.
இந்த நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், "என் தாயார் மறைவுக்கு துக்கம் விசாரிக்கவே முதலமைச்சரும், அமைச்சர்களும் என் இல்லத்திற்கு வந்தார்கள். அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் கூறினார். ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பு ஓபிஎஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.