சென்னை:அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ்-ஈபிஎஸ் என இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர். இதில், ஈபிஎஸ் தரப்பில் பொதுக்குழு கூட்டப்பட்டது. இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஈபிஎஸ் தரப்பில் கூட்டப்பட்ட பொதுக்குழுவின் ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று போட்டி பொதுக்குழுவைக் கூட்டும் திட்டத்தில் ஓபிஎஸ் அணி இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
போட்டி பொதுக்குழுவில் எடுக்கப்படும் தீர்மானம் மற்றும் ஆவணங்களைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் சட்ட ரீதியாக ஓபிஎஸ் தரப்பிற்கு சாதகமாக வரும் என நம்புகின்றனர். தமிழகம் முழுவதும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான் தான் என்ற முறையில் மாநிலம், மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரிய நிர்வாகிகளை நியமனம் செய்து வருகின்றனர். இதன் பணி கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிந்திருக்கிறது. இன்னும் மீதமுள்ள பட்டியலை பூர்த்தி செய்து ஓபிஎஸ் அணியினர் போட்டி பொதுக்குழுவிற்குத் தயாராகி கொண்டிருக்கின்றனர்.