சென்னை:கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு மூலம் நீக்கப்பட்ட ஓபிஎஸ், அந்த பொதுக்குழுவை கலைத்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றமும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்குத் தடை இல்லை என உயர் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியது. மேலும், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
இந்த நிலையில், போலிப் பொதுக் குழுவை கலைப்பதாக ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "அதிமுகவின் பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற எம்ஜிஆர் வகுத்த அடிப்படை விதிக்கு முற்றிலும் முரணாகவும், கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை அப்பதவியிலிருந்து இயற்கை நியதிக்கு புறம்பாக நீக்கியும், நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என்ற விதியை மாற்றியும் உள்ளனர்.
அடிப்படை உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் பொதுச்செயலாளராக வர முடியும் என்கின்ற அடிப்படை விதியை மாற்றி 10 மாவட்டச்செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும், ஐந்து ஆண்டுகள் தலைமை நிர்வாகியாக பணியாற்றி இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்து அடிப்படை தொண்டர்களின் உரிமையை பறித்தும், இவ்வாறு, கட்சி சட்டதிட்ட விதிகளின் அடிப்படைக்கு நேர் விரோதமாக செயல்பட்டும் வந்த, நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட தற்போதைய போலி பொதுக்குழு அறவே கலைக்கப்பட வேண்டும்.