சென்னை:முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள ஏழையெளிய மக்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென்ற நோக்கத்தில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் கூடிய தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையையும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையையும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ஏற்படுத்தியவர் ஜெயலலிதா.
இந்த மருத்துவமனை பொதுமக்களின் ஒட்டுமொத்த ஆதரவுடனும், வரவேற்புடனும் கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த மருத்துவமனையில் லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் உயர்தர சிகிச்சையினை பெற்று வருகின்றனர். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடனேயே, கிண்டியிலுள்ள கிங் ஆய்வக வளாகத்தில் 250 கோடி ரூபாய் செலவில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை முதலமைச்சர் வெளியிட்டார்.
அப்போது இந்தப் பகுதியினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆய்வு செய்தபோது, இந்த உயர் தர மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டவுடன், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் அங்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக வளாகத்திற்கு மாற்றப்படும் என்றும், ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தலைமைச் செயலகம் மாற்றப்படும் என்றும் செய்திகள் வெளிவந்தன.
இதனைக் கண்டித்து கடந்த 2021 ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி நான் ஓர் அறிக்கையினை வெளியிட்டதோடு, இதில் உண்மை இருக்கும் பட்சத்தில், அந்த முடிவினை உடனடியாக கைவிட வேண்டுமென்று வலியுறுத்தி இருந்தேன். இதற்கு மறுப்பு தெரிவித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பதில் அளித்து இருந்தார்.
தற்போது, கிண்டியிலுள்ள கிங் ஆய்வக வளாகத்தில் 250 கோடி ரூபாய் செலவில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்ற 2021 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பிற்கிணங்க சில மாதங்களுக்கு முன்பு அந்த கட்டடம் திறந்து வைக்கப்பட்டு, மருத்துவமனை செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் தனது அறிக்கை மூலம் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.