'ஓபிஎஸ்-க்கு ஆஸ்கார் விருதே தரலாம்..!' - ஜெயக்குமார் கிண்டல் சென்னை:முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவுநாளின்போது நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்வுக்கு அனுமதி கேட்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல் ஆணையர் அலுவலகத்தில் கடிதம் ஒன்றை அளித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், ”வருகிற 24ஆம் தேதியன்று முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35ஆம் ஆண்டு நினைவு நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் அனைவரும் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.
இதனால் அன்று காலை 10.30 - 11.30 மணி வரை பாதுகாப்பு வழங்கிடவும், இந்த நிகழ்விற்கு அனுமதி கேட்டும் காவல் ஆணையரை சந்தித்து கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட காவல் ஆணையர் உரிய பாதுகாப்பும், அனுமதியும் வழங்குவதாக கூறியுள்ளார்” எனத் தெரிவித்தார்.
மேலும், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பது குறித்தான கேள்விக்கு, ”கழகக் குடும்பமாக இருந்த திமுக தற்போது குடும்பமே கழகம் என்பது போல ஆகிவிட்டது. தற்போது திமுகவின் HR-ஆக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். எதற்குமே ஆளுநர் வேண்டாம் எனத் தெரிவித்து வந்த திமுக, தற்போது பட்டத்து இளவரசர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்புக்கு மட்டும் ஆளுநர் தேவையா...?
உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவி ஏற்பதால் தமிழ்நாட்டில் ஒன்னும் மாறப்போவதில்லை. அரசியல் மற்றும் திரைப்படத்தில் கத்துக்குட்டியாக உள்ள உதயநிதி ஸ்டாலின், திரைப்படத் துறையில் ஒன்றுமே செய்யமுடியாததால் தற்போது அரசியலில் வந்துள்ளார்.
அதிமுகவில் யாரையும் முன்னிலைப்படுத்துவதில்லை. ஆனால், திமுகவில் உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்துகிறார்கள். மேலும், வாரிசு அரசியல் நடத்தமாட்டோம் எனப் பேசிய மு.க. ஸ்டாலின், தற்போது வாரிசு அரசியல் தான் நடத்தி வருகிறார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பது, திமுகவின் சகாப்தம் முடிகின்ற நிகழ்வாகப் பார்க்க முடிகிறது” என அவர் கூறினார்.
மேலும், அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வுக்கு அதிமுக எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக எழுப்பிய கேள்விக்கு, ”இதைப் பற்றி கட்சி தான் முடிவெடுக்கும். என்னைப் பொறுத்தவரையில் நிச்சயமாக ஈபிஎஸ் கலந்துகொள்ளமாட்டார் என நான் நம்புகிறேன்” என அவர் கூறினார்.
குஜராத் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் ஓ.பி.எஸ் பங்கேற்பு குறித்த கேள்விக்கு, ”ஓ.பி.எஸ் எப்போதுமே கல்யாண வீட்டில் மணமகனாகவும், சாவு வீட்டில் பிணமாகவும் நடந்துகொள்வார். ஓ.பி.எஸ் சிவாஜிக்கு முன்னதாக பிறந்திருந்தால் நடிப்பில் செவாலியராகவும், ஏன் ஆஸ்கார் அவார்டுக்கு சொந்தக்காரராகவும் ஆகி இருப்பார்” என விமர்சனம் செய்தார்.
இதையும் படிங்க: Minister உதயநிதி: விமர்சனத்தை பொருட்படுத்த தேவையில்லை - அமைச்சர் அன்பில்