தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழுத்தம் தர வேண்டும்’ - ஓபிஎஸ் வலியுறுத்தல்! - கரோனா

பஞ்சு விலையைக் குறைக்கவும், ஆடைகளின் விலை உயராமல் பார்த்துக் கொள்ளவும் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அழுத்தம் தர வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஒ.பன்னீர்செல்வம்
ஒ.பன்னீர்செல்வம்

By

Published : Oct 3, 2021, 5:57 PM IST

சென்னை: பஞ்சு விலையைக் குறைக்கவும், ஆடைகளின் விலை உயராமல் பார்த்துக் கொள்ளவும் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அழுத்தம் தர வேண்டும் எனத் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ”உழவுத் தொழிலுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் அதிக வேலை வாய்ப்பு, பொருளாதாரம், அன்னியச் செலாவணியை ஈட்டும் தொழிலாக ஜவுளித் தொழில் விளங்குகின்றது. தமிழ்நாட்டில் , கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஆயத்த ஆடை தொழிற்சாலைகள், விசைத்தறி தொழில் மற்றும் ஜவுளித் தொழில்களை மேற்கொள்ளும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

ஜவுளித்தொழிலில் கடுமையான பாதிப்பு:

இந்தியாவின் துணிகள் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு மகத்தானது. மேலும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற பெண்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனர்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச பருத்திப் பஞ்சு விலை தற்போது உச்சபட்ச உயர்வு விலையினை எட்டியுள்ளது. சர்வதேச சந்தையிலிருந்து இறக்குமதி செய்யும் பஞ்சு விலை ஒரு கேண்டி, அதாவது 356 கிலோ, 59 ஆயிரம் ரூபாய் என்று இருந்தது. தற்போது ஒரு கேண்டி 67 ஆயிரம் ரூபாயாக உயர்ந்து விட்டது. இதன் விளைவாக உள்நாட்டிலும் பஞ்சு விலை ஒரு கேண்டி 55 ஆயிரம் ரூபாயிலிருந்து 60 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள நூற்பாலைகள் வசம் இருந்த பஞ்சு கையிருப்பு முற்றிலும் தீர்ந்துவிட்டது. தற்போது அதிக விலை கொடுத்து பஞ்சு வாங்க வேண்டியுள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளதன் விளைவாக நூற்பாலைகளின் உற்பத்தி செலவீனம் அதிகரித்துள்ளது. இதனால் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிகிறது.

’ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் அழுத்தம் தர வேண்டும்’

கடந்த சில மாதங்களாக ஏறுமுகமாக உள்ள பஞ்சு விலையை கட்டுப்படுத்துவதோடு, விலையில் ஒரு நிலைத் தன்மையை உருவாக்க வேண்டும் என்பதே ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. பஞ்சு விலை உயர்வால், ஆடைகளின் விலை கடந்த சில நாள்களாக கிட்டத்தட்ட 20 விழுக்காடு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பண்டிகைகள் மற்றும் திருமணங்களை முன்னிட்டு ஆடைகள் வாங்குவோரின் சுமை கூடிக்கொண்டே போகிறது.

இப்போதுதான் கரோனாவின் தாக்கம் ஓரளவு குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், கூடுதல் சுமையை தாங்கிக் கொள்ளக்கூடிய நிலையில் பொதுமக்கள் இல்லை என்பதுதான் யதார்த்தமான நிலைமை.

ஜவுளித்தொழிலில் ஈடுப்பட்டுள்ளவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, ஒன்றிய அரசுக்கு கொடுக்க வேண்டிய அழுத்தத்தைக் கொடுத்து பஞ்சு விலையைக் குறைக்கவும், ஆடைகளின் விலை உயராமல் பார்த்துக் கொள்ளவும், இந்தத் தொழில் தொடர்ந்து வளர்ச்சியடையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பவானிபூர் இடைத்தேர்தல் - அசுர வேட்டையாடிய மம்தா பானர்ஜி

ABOUT THE AUTHOR

...view details