சென்னை: அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் புயலைக் கிளப்பி இறுதியாக பொதுக்குழு மூலம் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதற்கு பின்பு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் இரண்டாகப் பிளவு பட்டு இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றன.
இரண்டு பேரில் யார் அதிமுக என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பான வழக்கும் நீதிமன்றங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக தனது ஆதரவாளர்களைச் சந்தித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி அணியினர் பல மாவட்டங்களில் திமுகவின் மின் கட்டண உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். மறுபுறம் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணமும் மற்றும் கட்சி நிர்வாகிகளின் இல்ல நிகழ்விற்கும் சென்றுகொண்டு வருகிறார்.