சென்னை:இது தொடர்பாக தமிழ்நாடுமுன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சாதி இரண்டொழிய வேறில்லை என்றார், ஔவை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார், வள்ளுவர். அதாவது, மனிதர்களின் பிறப்பினால் உயர்வு, தாழ்வு கிடையாது என்றார். சாதிகள் இல்லையடி பாப்பா என்றார், மகாகவி. உயர்சாதி, கீழ்சாதி என்னும் வேற்றுமைகள் தமிழுக்கு இல்லை, தமிழருக்கும் இல்லை. பொய்க் கூற்றே சாதி அனல் என்றார், பாரதிதாசன்.
இப்படிப்பட்ட தலைவர்கள் பிறந்த நாட்டில் சாதியினால் வன்முறைகள் நிகழ்வதும், குறிப்பாக எதிர்கால சந்ததியினர் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதும் நொடர்ந்து நிகழ்வது என்பது மிகவும் கவலை அளிக்கக்கூடிய ஒன்றாகும். மேலும், 2006-2011 திமுக ஆட்சியைப் போல, கடந்த 27 மாத கால திமுக ஆட்சியிலும் சாதிய மோதல்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தற்போது நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் அரசு உதவி பெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் சின்னத்துரையை, சக மாணவர்கள் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.
இதன் காரணமாக அந்த மாணவர் பள்ளிக்குச் செல்லவில்லை என்றும், இது குறித்து பள்ளி ஆசிரியை மாணவரின் தாயிடம் பேசி பள்ளிக்கு வரச் சொன்னதாகவும், அந்த மாணவனுக்கு மன உளைச்சல் ஏற்படுத்திய சக மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்ததாகவும், இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், அந்த மாணவரை வீடு புகுந்து கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதில், அவர் படுகாயமடைந்ததாகவும், இதைத் தடுக்க வந்த அவரது சகோதரியும் படுகாயமடைந்ததாகவும், இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
இதனைப் பார்த்த சின்னத்துரையின் தாத்தா கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்துள்ளார். இந்த தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. மாணவர்களின் எதிர்காலத்திற்கு அச்சாரமாக விளங்கக்கூடிய பள்ளிகளில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது மிகவும் கவலை அளிக்கத்தக்கது.