இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தேர்தல் அறிக்கை என்றால் அது தனிப்பட்ட கழகத்தின் விருப்பமாக மட்டும் இல்லாமல், தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாகவே அமையும் என்று நீட்டி முழக்கி 127 பக்க தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டது. முக்கியமான வாக்குறுதிகளில் 'பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்' என்பதும் ஒன்று.
இந்த முக்கியமான வாக்குறுதி நிறைவேற்றப்படாததோடு, பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான முழு நேர தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற மக்கள் விரோதச்செயலைச்செய்வதுதான் 'திராவிட மாடல்'. அதாவது, சொன்னதற்கு எதிராக நடப்பது என்பதுதான் திராவிட மாடலின் தத்துவம்.
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கிட்டத்தட்ட 2,500 பேர் பகுதி நேர விரிவுரையாளர்களாக பணியாற்றி வந்த நிலையில், முதுநிலைப்படிப்புடன் முனைவர் பட்டம் அல்லது கல்வியியல் பட்டம் போன்ற கூடுதல் தகுதியுடைய 1,311 பேர் முழு நேர தொகுப்பூதிய விரிவுரையாளர்களாக மாதம் 15,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் 2019ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்ததாகவும், முதற்கட்டமாக முழு நேர தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் 1,311 பேர் பணியிலிருந்து ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் நடுத்தர வயதைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல், பகுதி நேர மற்றும் தொகுப்பூதிய விரிவுரையாளர்களுக்குப் பணி வழங்க வேண்டாம் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது. இந்தச் சுற்றறிக்கை பகுதி நேர விரிவுரையாளர்களையும் கவலை அடைய வைத்துள்ளது.
திமுக அரசு, தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிக்கு முற்றிலும் முரணாக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் கடந்த பத்து ஆண்டு காலமாகப்பணியாற்றி வந்த 1,300-க்கும் மேற்பட்ட முழு நேர தொகுப்பூதிய விரிவுரையாளர்கள், அதாவது ஆசிரியர்களை பணிநீக்கம் செய்து இருக்கிறது.