சென்னை: 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் கொண்டு வந்த தீர்மானங்களுக்கும், புதிய பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்து, சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி குமரேஷ் பாபு கடந்த மார்ச் 28ஆம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி.பிரபாகர் ஆகியோர் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் இன்று (ஏப்ரல்.3) விசாரணைக்கு வந்தன. அப்போது, முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் பிரபாகர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி தனது தீர்ப்பை அறிவித்த சிறிது நேரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, புதிய பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொதுக்குழு தீர்மானம் மற்றும் உறுப்பினர்கள் நீக்கத்தை எதிர்த்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, புதிய பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவித்தது சட்ட விரோதம். அதனால், வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை பொதுச் செயலாளர் செயல்பட தடை விதித்து இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.
பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே அறிவிக்கப்பட்டு, புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் மற்றும் புதுப்பித்தலுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன - அதனால், எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க கூடாது என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.