சென்னை : திரைப்படத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தனது 75வது படமான ‘அன்னபூரணி - The Goddess of Food’ என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் சோலோ ஹீரோயினாக நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில், இந்த படமும் இவருக்கு சோலோ ஹீரோயின் கதையிலேயே அமைந்துள்ளது.
ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை, நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இப்படம் இந்த மாதம் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இப்படத்தில் நயன்தாரா பிராமணர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக நடித்து உள்ளார்.
சமையற்கலை நிபுணராக வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் அவருக்கு அப்பா எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனாலும் அப்பாவின் எதிர்ப்பை மீறி சமையற்கலை நிபுணராகிறார். அதன் பிறகு அந்த துறையில் அவருக்கு இருக்கும் சவால் என்ன என்பதே இப்படம். இந்த நிலையில் இப்படத்திற்கு ராஷ்ட்ரிய இந்து மகா சபா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அன்னபூரணி திரைப்படம் பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக கதையம்சம் கொண்டுள்ளதாகவும், அப்படத்தின் இயக்குநர் மற்றும் அதில் நடித்த நயன்தாரா ஆகியோரை வன்மையாக கண்டிப்பதாகவும் ராஷ்ட்ரிய இந்து மகா சபா மாநில தலைவர் வேலு தெரிவித்துள்ளார்.