சென்னை: சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசிடம் கோரிக்கைவிடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தினை கொண்டுவந்து கல்விப் புரட்சியை ஏற்படுத்தினார். தொடர்ந்து அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக உயர் கல்வியில், திமுக ஆட்சியில் 2010-11ஆம் ஆண்டில் 32.9 விழுக்காடாக இருந்த மாணவர் சேர்க்கை விகிதம், தற்போது 51.40 விழுக்காடாக உயர்ந்து, இந்தியாவிலேயே தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துவருகிறது.
பெரிய மாநிலங்களுடன் குறிப்பாக, கேரளாவுடன் போட்டிப் போட்டு தமிழ்நாடு உயர் கல்வியில் பெரும் வளர்ச்சியைப் பெற்று இந்தியாவிலேயே தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 30 ஆண்டு கால ஆட்சியின் மாட்சியே காரணம்.
கடந்த 10 ஆண்டுகளில் 40 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 21 பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகள், 7 சட்டக் கல்லூரிகள், 17 புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டன. மேலும், பள்ளிக் கல்வித் துறையின் மூலம் மாணவர்களுக்கு விலையில்ல கல்வி உபகரணங்கள் வழங்குதல், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குதல் போன்ற பல நல்ல திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்புவரை கல்வியில் முதன்மை மாநிலமாகத் திகழ்ந்த கேரளாவை நாம் முந்தியுள்ளோம். 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், கல்விக்காக அதிமுக அரசு 34,687.74 கோடி ரூபாய்நிதி ஒதுக்கீடு செய்தது வரலாற்றுச் சாதனையாகும். வேறு எந்த மாநிலமும் கல்விக்கு இந்த அளவு நிதி ஒதுக்கீடு செய்தது இல்லை.
மேலும் அதிமுக அரசு எடுத்த பல்வேறு சீரிய நடவடிக்கைகளின் காரணமாக கற்றல், கற்பித்தல் போன்றவை தமிழ்நாட்டில் உயர்ந்தும், இடைநிற்றல் வெகுவாகக் குறைந்தும், ஆரம்பப் பள்ளி முதல் உயர்கல்வி வரை பல லட்சம் வரை பயின்றுவருவதும் தமிழ்நாட்டில் தலை நிமிர்ந்து நிற்கவைத்துள்ளது.
கடந்த ஆண்டு கரோனா பெரும் தொற்றின் காரணமாகத் தமிழ்நாடு கல்லூரிகளில் வகுப்புகளை நடந்த முடியாத சூழ்நிலையில், மாணவர்களின் நலனுக்காகக் கல்வி நிறுவனங்கள் இணையவழி (Online) வகுப்புகளை நடத்தின.
இந்த இணைய வழி வகுப்புகளில் அனைத்து மாணவ, மாணவிகள் பங்கேற்க முடியவில்லை. முக்கியமாக, அனைத்து மாணவர்களும் அல்லது அவர்களது பெற்றோர்கள் ஆண்ட்ராய்டு கைப்பேசியோ அல்லது அரசு வழங்கிய மடிக்கணினியோ வைந்திருந்தாலும் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள அதற்குண்டான டேட்டா கார்டு வாங்க இயலாத நிலையில் இருந்தனர்.