சென்னை:ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியப்பிரமுகர்கள் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். அதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் அவரது ஆதரவாளர்களும் பங்கேற்கவில்லை.
நாட்டின் 75ஆவது ஆண்டு சுதந்திர தின அமிர்தப்பெருவிழாவையொட்டி ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என். ரவி இன்று மாலை தேநீர் விருந்து அளித்தார். இந்த நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, ஐஏஎஸ் அலுவலர்கள் , சுதந்திரப் போராட்ட தியாகிகள், சென்னையில் உள்ள பல்வேறு நாடுகளின் துணைத் தூதர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் தேநீர் விருந்தில் பங்கேற்றனர். முன்னதாகவே விழா இடத்திற்கு வந்த ஓ.பன்னீர்செல்வம், விழா தொடங்குவதற்கு முன்பாகவே ஆளுநரை சந்தித்து சில நிமிடங்கள் பேசினார்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி உட்படப் பலரும் பங்கேற்றனர். ஆனால், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேநீர் விருந்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
அவர்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், எடப்பாடி பழனிசாமி தேநீர் விருந்தை புறக்கணித்தது விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேநீர் விருந்தில் கலந்துகொண்ட முதலமைச்சருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
அதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுநருக்கு பொன்னாடை போர்த்தி காந்தி உருவ பொன்னாடையினை நினைவுப்பரிசாக வழங்கினார். சுதந்திர தின விழாவையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற 12 மாணவர்களுக்கு ஆளுநர், 7.5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஆளுநர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோர் ஒரே மேஜையில் அமர்ந்து தேநீர் அருந்தினர்.
ஆளுநரின் சுதந்திர தின தேநீர் விருந்தை புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி இதையும் படிங்க: என் நாட்டை நேசிக்கிறேன்.. அரசாங்கத்தை அல்ல.. பி.சி. ஸ்ரீராம் ட்வீட்