சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (ஜூலை.19) வெளியிட்டுள்ளார். அதில் நூறு விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
கட் ஆப் அதிகரிக்க வாய்ப்பு
குறிப்பாக அறிவியல் பாடப்பிரிவில் 551-600 மதிப்பெண்கள் வரை 30,599 மாணவர்கள் பெற்றுள்ளனர். இந்த மதிப்பெண்களை கடந்த ஆண்டு 1,867 மாணவர்கள் மட்டுமே பெற்றிருந்தனர்.
இதன் காரணமாக பொறியியல் கட்-ஆப் மதிப்பெண்கள் நடப்புக் கல்வி ஆண்டில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். உயர்கல்வியில் சேர்வதற்கு ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
கட் ஆப் அதிகரிக்க வாய்ப்பு கல்வியாளர் கருத்து
இது குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறுகையில், "12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.
மதிப்பெண்களை தசம எண்ணிலும் வழங்கி உள்ளதால் மாணவர்களுக்கு இது சாதகமாக அமைந்துள்ளது. முழு மதிப்பெண்ணாக வழங்கி இருந்தால் அதிக அளவில் மாணவர்கள் ஒரே கட் ஆப் மதிப்பெண்களில் வந்திருப்பார்கள்.
தற்போது வெளியாகியுள்ள மதிப்பெண்களின்படி பொறியியல், விவசாயம், கால்நடை, சட்டம் என தொழிற்கல்வி படிப்புகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கட் ஆப் அதிகரிக்கும். பொறியியல் படிப்பினை பொறுத்தவரையில் தரவரிசைப்பட்டியலில் மேல் வரிசையில் ஐந்து மதிப்பெண்களும், கீழ் வரிசையில் 30 மதிப்பெண்கள் வரையிலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
கடந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண் 150 எடுத்த மாணவருக்கு கிடைத்த பொறியியல் பாடப்பிரிவு, இந்த ஆண்டு 170 கட் ஆப் மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவருக்கு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பில் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் தான் கட் ஆப் மதிப்பெண்கள் உயருமா என்பதைக் கூற முடியும்.
கலை படிப்பிற்கு வாய்ப்பு
கரோனா தொற்றின் காரணமாக பெற்றோர்கள் பொறியியல் படிக்க வைக்காமல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் தங்களின் குழந்தைகளை சேர்க்க திட்டமிட்டுள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க:திருப்தி இல்லாதவர்களுக்கு மறுதேர்வு