சென்னை:தமிழக சிறைகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள், விசாரணைக் கைதிகள் மற்றும் பெண்கைதிகள் தனித்தனியாகவும், வெளிநாட்டைச் சேர்ந்த கைதிகளும் தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரின் செயல்களையும் சிறைக் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்த கண்காணிப்பை மீறி, அவ்வப்போது சிறைக்குள் கைதிகள் இடையே மோதல், பிரச்னைகள் ஏற்படுகிறது. மேலும், போதைப்பொருட்கள் விற்பனை, தடையை மீறி செல்போன் பயன்படுத்துவது, அதற்கு சிறைக் காவலர்கள் உடந்தையாக இருந்து வருகின்றனர் போன்ற புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது.
இது போன்ற சட்ட விரோத செயல்கள் சிறை வளாகத்தில் தொடர்ந்து நடைபெறுவதால், இதனைக் கண்காணிக்கவும், தடுக்கவும், மேலும் கைதிகளின் நடவடிக்கைகளையும் கண்காணிக்க அதிகாரி தரப்பில் முடிவு செய்துள்ளனர். இத்தகைய செயல்களை தடுக்கும் வகையில், சிறை வளாகம் முழுவதும் ட்ரோன் கேமராக்களைப் பயன்படுத்தி கண்காணிக்க சிறைத்துறை முடிவு செய்துள்ளது.