சென்னை:தமிழ்நாடு காவல் துறையினர் 'ஆப்ரேஷன் புது வாழ்வு' என்கிற திட்டத்தை கடந்த மூன்றாம் தேதி தொடங்கினர். இதில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சாலை ஓரங்களில் ஆதரவு இன்றி இருக்கும் 1800 பிச்சைக்காரர்களை மீட்டனர். இதில் 255 பேர் அரசு இல்லங்களிலும், 953 பேர் அரசு சார்பற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிலும் ஒப்படைக்கப்பட்டனர்.
அநாதை இல்லங்களில் 367 பேர் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் 27 சிறுவர்கள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 198 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டு பெற்றோரின் பிணையில் விடுவிக்கப்பட்டனர். நேற்று (டிச.4) நடந்த ’ஆப்ரேசன் புதுவாழ்வு’ வேட்டையில் அதிகபட்சமாக தாம்பரம் பெருநகர காவல் துறையினர் 207 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 190 பேரும், ரயில்வே காவல் துறையில் 139 பேரும் மற்றும் சேலம் மாவட்ட காவல் துறையினர் 122 பேரையும் பிடித்து தக்க நடவடிக்கை எடுத்தனர்.