சென்னை:தமிழ்நாட்டில் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்ட கரோனா வைரஸ் பரவல் கடந்த சில நாள்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்னையில் நாளொன்றுக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு நேற்று (ஏப்.08) பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் அறிவித்தது. அதன்படி பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர், நின்றபடி பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் பேருந்தில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதால், இந்த அறிவிப்பால் பலரும் பாதிக்கப்படும் நிலை ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாளை முதல் 400 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துகின்ற வகையில், கூடுதலாக சில கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணம் செய்திட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.