சென்னை:Operation cannabis hunting: தமிழ்நாடு காவல் துறையினர் குட்கா, கஞ்சா, ஹெராயின் போன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில் ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை(Operation cannabis hunting) என்ற பெயரில் கடந்த 20 நாட்களாக நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
இதற்காக காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் தீவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. போதைப் பொருட்கள் மற்றும் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 6 ஆயிரத்து 623 நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
6,623 பேர் கைது
தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்படாத அளவாக தூத்துக்குடி மாவட்டத்தில் 23 கோடி ரூபாய் மதிப்புள்ள 23 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருளை பதுக்கிவைத்திருந்த ஏழு பேரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அதேபோல் கடந்த மூன்று வாரத்தில், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தியவர்கள் மீது 816 வழக்குகள் பதியப்பட்டு 871 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 1.80 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,774 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய 25 நான்கு சக்கர வாகனங்கள், 129 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கஞ்சா விற்பனை செய்து வந்த பெரியசாமி (39) மற்றும் சீனிவாசன் (39) ஆகியோரை, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நாமக்கல் காவல் துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 82 கிலோ கஞ்சா, காஞ்சிபுரம், மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் 21 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
40 டன் குட்கா பறிமுதல்