தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பார்த்தசாரதி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் பல்கலைக்கழக மானியக் குழு, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி குழு அனுமதியுடன் இரண்டு ஆண்டுகள் பட்டப் படிப்பு தொலைநிலைக் கல்வியில் வழங்கப்படுகிறது. இந்தப் படிப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட 20 பிஎட் கல்லூரியில் மாணவர்களுக்கு வகுப்புகளும், செய்முறை தேர்வும் நடத்தப்படும். ஆசிரியர்களுக்கான நேரடி பயிற்சி அவர்கள் விரும்பும் பள்ளியில் கல்வியியல் துறை மூலம் ஏற்பாடு செய்யப்படும். பிஎட் படிப்பிற்கான பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
மேலும் இந்த பாடப்புத்தகங்கள் அனைத்தும் திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தமாக 80 பாடப்பிரிவுகள் நடத்தப்படுகின்றன. அவற்றிற்கான அனைத்து பாடப் புத்தகங்களும் இ-புத்தகமாக மாற்றப்பட்டு பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.