சென்னை:புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடி ஊராட்சிக்குட்பட்ட பொற்பனைக்கோட்டை என்ற இடத்தில் அகழாய்வு செய்வதற்கு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசின் தொல்லியல் ஆய்வுத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் சுற்றுலாவியல் பள்ளியின் தொல்லியல் துறை சார்பாக புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் தாலுகா, வேப்பங்குடி ஊராட்சிக்குட்பட்ட பொற்பனைக்கோட்டை என்ற இடத்தில் அகழாய்வு செய்வதற்காக கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் பரிந்துரையின் பேரில் இந்திய தொல்லியல் ஆய்வு துறைக்கு விண்ணப்பம் அளித்திருந்தோம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு தொல்லியல் ஆய்வாளர்கள் பேராசிரியர்கள் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகம் மற்றும் பலர் கள ஆய்வுகளை மேற்கொண்டு பல்வேறு தரவுகளை கண்டறிந்துள்ளனர். அவற்றின் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலாதிக்க கள ஆய்வு செய்ய மத்திய அரசின் தொல்லியல் துறை அனுமதி கோரியது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை இனியன் களஆய்வு செய்து 2020 ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தார். அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒரே சங்ககால கோட்டையான பொற்பனைக்கோட்டை அகழாய்வு செய்ய மத்திய அரசின் தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
பொற்பனைக்கோட்டை அகழாய்வு செய்ய திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு அனுமதி
தமிழ்நாட்டில் சங்க காலத்திலிருந்த கோட்டைகள் அரண்மனைகள் அனைத்தும் அழிந்து போயின என்ற கூற்றை மாற்றும் பொருட்டு இன்றளவும் இந்த கோட்டை நிலைத்து நிற்கிறது.
பொற்பனைக்கோட்டை பகுதி 50 ஏக்கர் பரப்பளவு கொண்டது. வட்ட வடிவில் உள்ள கோட்டையின் சுற்றளவு என்பது 1.6 கிலோமீட்டர் உடையது. தமிழ்நாட்டில் சங்க காலத்திலிருந்த கோட்டைகள் அரண்மனைகள் அனைத்தும் அழிந்து போயின என்ற கூற்றை மாற்றும் பொருட்டு இன்றளவும் இந்த கோட்டை நிலைத்து நிற்கிறது.
அக்கோட்டையில் செங்கல் கட்டுமானம் கோட்டையின் நான்கு அடி நீளமுள்ள சுற்றுச்சுவர் மற்றும் கோட்டை கொத்தளத்தின் ப வடிவ கட்டுமானத்தின் அடிமானம் இன்றுவரை சிதையாமல் உள்ளது. கோட்டையைச் சுற்றி 15 அடி ஆழம் மற்றும் 40 அடி அகலமான அகழி உள்ளது.சங்க காலத்தை சார்ந்த நடுக்கல் ஒன்றும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது.
சங்ககாலத்தில் பொற்பனைக் கோட்டையில் இருந்த இரும்பு உருக்கு ஆலைகள் அப்பகுதி மக்களால் செந்நாக்குழி என்று அழைக்கப்படுகின்றன. செம்புராங் படுக்கையில் கண்டெடுக்கப்பட்ட முதல் உருக்காலையாக இது உள்ளது. திருவரங்குளம் பகுதியிலிருந்து பொற்பனைக்கோட்டை வரை உள்ள பகுதியில் இரும்பு உருக்கு ஆலைகளின் மண்ணாலான உருளைகள் ஓரளவு சிதைந்த நிலையிலும், இரும்பு வார்ப்பு பயன்படுத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சுடுமண்ணாலான உருக்கு குழாய்கள் உறைந்த நிலையிலும் தனியாகவும் கிடைக்கின்றன.
இந்த தரவுகளின் அடிப்படையில் பொற்பனைக் கோட்டையில் மேற்கொள்ளப்படும் அகழாய்வு தமிழகத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் ஐயம் இல்லை என தெரிவித்துள்ளார்.