சென்னை:பூவிருந்தவல்லி அருகே நசரத்பேட்டையில் இருக்கும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள, “மூடிய மழை நீர் வடிகால்வாய்“ பார்ப்பதற்கு நடைப்பாதை போல் காட்சியளிக்கும்.
நாளடைவில் அதை மூடியிருந்த சிமெண்ட் ஸ்லாப்கள் அகற்றப்பட்டத்தில் ஏற்பட்ட இடைவெளியால் தற்போது திறந்தபடி காட்சியளிக்கிறது. இதனால் தொடர்ந்து பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன. நேற்றிரவு (ஜன.6) சென்னையில் மழை பெய்து வந்த நிலையில் சாலையோரமுள்ள நடைபாதை மீது 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து சென்றார்.
நல்வாய்ப்பாக உயிர் தப்பிய நபர்
வடிகால்வாய் சரியாக மூடப்படாததால் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது வலது கால் கால்வாயில் சிக்கியது. அவரால் அதிலிருந்து தனது காலை வெளியே எடுக்க முடியவில்லை.
உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர் கூச்சலிட்டதில் அருகிலிருந்த பொதுமக்கள் உதவிக்கு வந்தனர். கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களால் ஸ்லாப்பை உடைத்து அவரை மீட்டனர். இந்த விபத்தில் அவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.