தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இப்படி' செய்தால் யாருக்கு ஆதரவு இல்லை எனத்தெரியும்? - க்ளூ கொடுத்த ஓபிஎஸ் - AIADMK GC

ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் தேர்தல் நடத்தினால் யாருக்கு ஆதரவு இல்லை என்பது தெரியும் என ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் தேர்தல் நடத்தினால்? - ஓபிஎஸ் தரப்பு வாதம்
ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் தேர்தல் நடத்தினால்? - ஓபிஎஸ் தரப்பு வாதம்

By

Published : Apr 21, 2023, 5:59 PM IST

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு 2வது நாளாக இன்று (ஏப்ரல் 21) இறுதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், “கட்சியின் திருத்த விதிகளுக்கும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும் என கட்சியின் சட்ட திட்ட விதிகளில் குறிப்பிடவில்லை. 2021ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த செயற்குழு தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறும் தீர்மானங்கள் ஏதும், 2022ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று நடைபெற்ற பொதுக்குழுவில் முன் வைக்கப்படவில்லை.

மாறாக, புதிய நிர்வாகிகளின் தேர்தல், நியமனத்தைப் பதிவு செய்து, பாராட்டுத் தெரிவிக்கும் வகையிலேயே தீர்மானங்கள் வைக்கப்பட இருந்தன. அந்த தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாக எப்படி கூற முடியும்? இதைக் கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். சட்டமன்றம், மக்களவைத் தேர்தலில் விதிக்கப்படாத நிபந்தனைகள், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் விதிக்கப்பட்டுள்ளது.

75 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே கட்சியில் உள்ளனர். இதில் பொதுச்செயலாளர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய 10 மாவட்டச் செயலாளர் முன்மொழிய வேண்டும், 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ''இந்த நிபந்தனைகள் முன்பில் இருந்தே பின்பற்றப்படுகிறதா?'' என கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்து தனது வாதத்தைத் தொடர்ந்த ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், “இல்லை. தற்போதுதான் இந்த நிபந்தனைகள், சொந்த நலனுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. உள்கட்சி ஜனநாயகத்துக்கு விரோதமாக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டன. கட்சியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு இல்லை எனும்போது, ஏதேனும் உயர்ந்த பதவிக்கு ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் தேர்தல் நடத்தினால், யாருக்கு ஆதரவு இல்லை என்பது தெரியும்” என வாதிட்டார்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து, வழக்கின் விசாரணையை வருகிற திங்கள் கிழமைக்கு (ஏப்ரல் 24) தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னதாக, நேற்று (ஏப்ரல் 20) எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஒரே ஒரு அமமுக சேர்மனை தட்டிக் தூக்கிய ஈபிஎஸ்.. டிடிவி தினகரன் அப்செட்!

ABOUT THE AUTHOR

...view details