தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மாணவி விவகாரத்தில் 2 மருத்துவ ஊழியர்கள் சஸ்பெண்ட் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் - ஊட்டி பள்ளி மாணவி இறந்த விவகாரம்

ஊட்டியில் சத்து மாத்திரை சாப்பிட்டு மாணவி இறந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவத்துறை ஊழியர்கள் 2 பேர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

che
che

By

Published : Mar 10, 2023, 4:18 PM IST

சென்னை சைதாப்பேட்டை திடீர் நகரில், காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (மார்ச் 10) தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "சமீப காலமாக இந்தியா முழுவதிலும் எச்3என்2 வைரஸ் காய்ச்சல் பரவிக்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக கடந்த வாரம் ஐசிஎம்ஆர் இந்த வைரஸ் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை வேண்டும் என்று அறிவுறுத்தலை வெளியிட்டது. தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை, 200 வார்டுகளில் 200 காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமினை நடத்திக் கொண்டிருக்கிறது. 1,000 இடங்களில் திட்டமிடப்பட்டிருந்தாலும் இன்று ஏறத்தாழ 1,300 இடங்களில் இந்த முகாம் நடந்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள 11,333 மருத்துவ கட்டமைப்புகளில் துணை சுகாதார நிலையங்களை தவிர்த்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டம் சாரா அரசு மருத்துவமனைகள், வட்டார அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என்று அனைத்து இடங்களிலும் இந்த காய்ச்சலுக்கு உண்டான மருந்துகள் கையிருப்பில் உள்ளதை உறுதிப்படுத்துகிற வகையில் இயக்குநரகத்தின் மூலம் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான அளவு மருந்துகள் மற்றும் மாத்திரைகள் கையிருப்பில் உள்ளது. தற்போது இந்த காய்ச்சல் பாதிப்புகள் பெரிய அளவில் பதிவாகவில்லை, மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்கின்ற சூழலும் தற்போது இல்லை. எனவே, பெரிய அளவில் அச்சம் கொள்ள தேவையில்லை.

ஐசிஎம்ஆர் அறிவுறுத்தலின்படி இந்த வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க, பாதிக்கப்படும் நபர்கள் 4 நாட்கள் வீட்டில் தங்களை தனிமைபடுத்திக்கொண்டால் குணமடையலாம். மேலும், கரோனா விதிமுறைகளை கடைபிடித்தாலே இந்த வைரஸ் காய்ச்சல்களை கட்டுப்படுத்த முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. இவை அனைத்தும் ஏற்கனவே தமிழ்நாட்டில் நிலவிக் கொண்டிருந்த மிதமான வகையில் பாதிப்புகளை ஏற்படுத்திய ஓமிக்ரான் வகை உருமாறிய கரோனா வகையாகும், அதனால் பெரிய அளவில் அச்சம் கொள்ள தேவையில்லை. தற்போது கூடுதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த பாதிப்பு எண்ணிக்கை கூடிக்கொண்டிருக்கிறது. 2022 மார்ச் மாதத்திற்கு பிறகு 2 பேர் என்கின்ற அளவில் இருந்த பாதிப்புகள் தற்போது 25 பேர் என்ற அளவில் இருந்தாலும் இது மிதமான வகை வைரஸ் பாதிப்புகள் என்பதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.

தேவைப்பட்டால் மருத்துவ முகாம் நடத்தப்படும். வைரஸ் காய்ச்சல் சமூகத் தொற்றாக மாறிவிட கூடாது என்பதற்காகத்தான் முகாம் நடத்தப்படுகிறது. இந்த வைரஸ் காய்ச்சல் நீர்த்திவலைகள் மூலம் பரவுகிறது. எனவே, பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கலாம்.

வாரந்தோறும் பள்ளி மாணவர்கள், குழந்தைகளுக்கு சத்து மாத்திரை குழந்தைகளுக்கு தருவது வாடிக்கையாகும். இந்த மாத்திரைகளை ஆசிரியர்கள் கொண்டு வந்து தருவார்கள். ஊட்டியில் உள்ள உருதுப்பள்ளியில் ஆசிரியர் மாணவர்களுக்கு மாத்திரைகளை அட்டை அட்டையாக கொடுத்துள்ளார். 6 மாணவர்கள், 10, 20, 30 மாத்திரைகள் என போட்டிப்போட்டு சாப்பிட்டுள்ளனர். அதனை ஆசிரியரும் கண்காணிக்காமல் விட்டுவிட்டார்.

சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் எழுதி உள்ளோம். இறந்த குழந்தை 70 மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மாத்திரை வழங்கியதை கண்காணிக்காத 2 மருத்துவத்துறை ஊழியர்கள் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சத்து மாத்திரை சாப்பிடுவதில் போட்டி: ஊட்டியில் பள்ளி மாணவி பலி; ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!

ABOUT THE AUTHOR

...view details