சென்னை விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் உள்நாட்டு விமான சேவைகளில் போதிய பயணிகள் இல்லாததால், சில விமான சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. மாநில அரசுகளின் கடுமையான கட்டுப்பாடுகளினால் பணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக விமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, சென்னை விமான நிலையத்திலிருந்து 4ஆவது நாளாக இன்று 38 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டுகின்றன. அதில், சென்னையிலிருந்து 19 விமானங்கள் செல்கின்றன, 19 விமானங்கள் வருகின்றன. நேற்று (மே 27) 42 விமான சேவைகள் இயக்கப்பட்ட நிலையில் இன்று 38ஆக குறைக்கப்பட்டுள்ளது.
குறைக்கப்பட்ட விமானங்கள் டெல்லி, அந்தமான், பெங்களூரு, ஹைதராபாத், புவனேஸ்வா், விஜயவாடா, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களுக்கு இடையேயான விமான சேவைகளாகும். அதையடுத்து இன்றிலிருந்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா, சிலிகுரிக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
மேலும், சேலம் மற்றும் கடப்பாவிற்கு இன்று விமானங்கள் இயக்கப்படவில்லை. அதேபோல் திருவனந்தபுரம், கொச்சிக்கும் இன்று விமான சேவைகள் இயக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 5 மணிக்கு சென்னையிலிருந்து அந்தமானுக்கு முதல் விமானம் புறப்பட்டுச் சென்றது.
இதையும் படிங்க:ஏர் இந்தியா விமானத்தில் நடு இருக்கைகளில் பயணிகள் அமர அனுமதி!