சென்னை:ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்த வழக்குகள் தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (ஆக.17) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஆன்லைனில் விளையாடுபவர்கள் நீதிமன்றத்தை நாடவில்லை எனக் குறிப்பிட்டார்.
ரம்மி திறமைக்கான விளையாட்டாக இருந்தாலும், அதை அதிர்ஷ்டத்திற்கான விளையாட்டாக மாற்றும் சூழ்நிலைகளும் உள்ளதாகவும், பல தற்கொலை நிகழ்வுகளை தொடர்ந்தே இச்சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் வாதிட்டார்.
ஆன்லைன் ரம்மிக்கு மட்டுமல்லாமல், அனைத்து ஆன்லைன் விளையாட்டுக்களுக்கும் தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட தலைமை வழக்கறிஞர், இதற்கு முன் கொண்டு வரப்பட்ட சட்டத்தை எதிர்த்த வழக்கில், ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதித்த மாநில அரசு சட்டம் இயற்றும் அதிகாரத்தை சென்னை உயர் நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது என்றார்.பொதுமக்களுக்கு அநீதி இழைக்கும் ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது என விளக்கினார்.
தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் செயல்படுவதால் அவற்றை கண்காணிக்க முடியாது. இந்நிறுவனங்களை ஒழுங்குபடுத்த இயலாது என்பதால் முழு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.
நீதிமன்றம் அரசுக்கு கேள்வி:கடந்த ஆண்டு மட்டும் இந்த ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் ரூ.900 கோடிக்கு மேல் லாபம் ஈட்டியுள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ரம்மியை திறமைக்கான விளையாட்டு என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசின் சட்டம் ரம்மியை அதிர்ஷ்டத்திற்கான விளையாட்டாக எப்படி வகைப்படுத்தியது எனக் கேள்வி எழுப்பினார்.
அதிர்ஷ்டத்திகான விளையாட்டாக ஏற்க முடியாது: அதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், நேரடியாக விளையாடும்போது தான் ரம்மி, திறமைக்கான விளையாட்டு எனத் தெரிவித்தார். தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், ஆன்லைனில் ரம்மியை விளையாடினால், அது அதிர்ஷ்டத்திற்கான விளையாட்டாக மாறிவிடும் என கூறுவதை ஏற்க இயலாது என்றார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ஆன்லைனில் ரம்மி விளையாட எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆன்லைன் விளையாட்டு நிறுவன தரப்பு மூத்த வழக்கறிஞர், ஆன்லைனில் ரம்மி விளையாட பந்தயமாக செலுத்தப்படும் மொத்த தொகையில் 10 முதல் 15 சதவீதம் வரை வெற்றி பெற்றவரிடம் இருந்து வசூலிக்கப்படுவதாக குறிப்பிட்டார். மற்ற ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பு பதில் வாதங்களுக்காக வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க :செந்தில் பாலாஜி வழக்கு: சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி அமர்வு நீதிமன்றம் உத்தரவு!