சென்னை:தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் இதுவரை 41 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளால் பொருளாதார இழப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இதனைக் கருத்தில் கொண்டு ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. பின்னர் அந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி அவசரச் சட்டமானது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து அன்றைய தினமே ஆளுநரால் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஆன்லைன் ரம்மியை நிரந்தரமாக தடை செய்யும் நோக்கில், அதற்கான நிரந்தர சட்ட மசோதாவை, கடந்த அக்டோபர் 19ஆம் தேதி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பின்னர் அந்த மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 28ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த நவம்பர் 24ஆம் தேதி ஆளுநர் தரப்பில் சட்டமசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த கடிதத்திற்கு தமிழ்நாடு அரசு தரப்பில், அதற்கு மறுநாளே விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு 4 மாதங்களாக ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா தொடர்பான எந்தவொரு தகவலும் கிடைக்கப் பெறவில்லை. எனவே, இதற்கு தமிழ்நாடு அரசு உள்பட பல்வேறு கட்சிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், நான்கு மாதங்களுக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் இல்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. இதனைத் தொடர்ந்து நேற்று (மார்ச் 23) நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில், மீண்டும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். பின்னர் இந்த மசோதா அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்டமாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
இதனையடுத்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்தனர். இந்த நிலையில் 8 பக்கங்கள் கொண்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை, இன்று (மார்ச் 24) மாலை 4 மணியளவில் தமிழ்நாடு சட்டத்துறை அதிகாரிகள் ஆளுநரின் ஒப்புதலுக்காக, நேரில் சென்று ஆளுநர் மாளிகையில் வழங்க உள்ளனர். இதற்கு ஆளுநர் தரப்பில் விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உள்பட பல்வேறு கட்சியினரும் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க:Online Rummy : ஆன்லைன் ரம்மி தடை மசோதா கடந்து வந்த பாதை