சென்னை:சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனையை இணையதளம் மூலம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் தேரணிராஜன் வெளியிட்டுள்ள தகவலில், "உலகளவில் கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் வாழும் மக்கள், வயதானவர்கள், நடமாடுவதில் சிரமம் உள்ளவர்கள், பொருளாதார சுமை உள்ளவர்கள் என பலதரப்பட்ட மக்களுக்கு சிறப்பு மருத்துவ ஆலோசனை பெறுவதில் பல சிரமங்கள் உள்ளன" என்று தெரிவித்தார்.
மேலும் தற்போதைய நவீன தொலைத்தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சி காலக்கட்டத்தில் தொலை மருத்துவம் என்பது தொலைத்தொடர்பு இணைப்புகள் மூலம், வீட்டில் இருந்தபடியே சிறப்பு மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுவதற்கு இத்தகைய மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் இது சுகாதார சேவைகளை பயணிகள் வீட்டிற்கே எடுத்துச் செல்லும் முறையாகும் என்றும், இந்த சேவை நோயாளிகளுக்கு தங்கள் வீட்டிலேயே கிடைக்கும் சுகாதார சேவை என்றும், மேலும் இதில் பங்குபெறும் மருத்துவர்களின் சேவை அங்கீகரிக்கப்பட்டது என்றும் ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் தேரணிராஜன் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, "கோவிட் பேரிடர் காலத்தில் தொலை மருத்துவத்தின் மகத்துவத்தை இந்த உலகம் அறிந்தது. சிறப்பு மருத்துவ ஆலோசனை தேவைப்படும் கிராமப்புற மற்றும் நகப்புற பகுதிகளில் இருக்கும் வயதானவர்கள் மற்றும் பயணம் செய்ய இயலாதவர்களுக்கு தொலை மருத்துவம் சிறந்ததாக அமைகிறது" என்று கூறினார்.