கரோனா வைரஸ் பாதிப்பால் தங்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் உள்ளவர்கள் மளிகைச் சாமான்கள் வாங்க சிரமப்பட்டு வருகின்றனர்.
சில்லறை சந்தையும் போட்டா போட்டியும்
நேரக்கட்டுப்பாடு, பொருள்களின் தட்டுப்பாடு ஆகியவற்றால் பல இடங்களில் தேவையான பொருள்கள் கிடைக்காததால் அதிக அளவிலான மக்கள் ஆன்லைன் டெலிவரி பக்கம் திரும்பியுள்ளனர். அதேபோல், ஊரடங்கால் ஏற்பட்டுள்ள வாய்ப்பைப் பயன்படுத்த வீடுகளுக்கு வந்து காய்கறிகள், பழங்கள், அன்றாடச் சமையலுக்குத் தேவையான அத்தியாவசிய மளிகைப் பொருள்கள், நொறுக்குத் தீனி ஆகியவற்றை விநியோகம்செய்ய ஏராளமான நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன.
பிக் பேஸ்கெட், குரோஃபெர்ஸ், அமேசான், ஸ்விக்கி, பிளிப்கார்ட், டன்சோ போன்ற நிறுவனங்கள் இந்தப் போட்டியில் உள்ளன. இது தவிர டோமினோஸ் நிறுவனத்துடன் ஐடிசி கூட்டணி, ஊபருடன் ஸ்பென்சர்ஸ் கூட்டணி என ஊரடங்கு உத்தரவால் அதிகரித்துள்ள சில்லறை பொருள்கள் விற்பனை சந்தையைக் கைப்பற்ற பெருநிறுவனங்கள் போட்டிப் போட்டுவருகின்றன.
ஆர்ப்பரிக்கும் ஆன்லைன் - ஆனால்...
இத்தனை நிறுவனங்கள் இருப்பினும் சந்தையில் உள்ள தேவையை நிறைவேற்ற முடியாமல் நிறுவனங்கள் திணறித்தான் வருகின்றன. சென்னையைப் பொறுத்தவரை அத்தியாவசிய மளிகைப் பொருள்களுக்குப் பல இடங்களில் தட்டுப்பாடு நிலவிவருகிறது. மேலும் கடைகளில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பொருள்களை பெற வேண்டியுள்ளது. ஊரடங்கு அமலில் இருப்பதால் மற்ற பகுதிகளுக்குச் சென்று பொருள்களை வாங்க முடியாத நிலை உள்ளது. இதனால் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குச் சென்னையில் ஆன்லைனில் காய்கறிகள், மளிகைச் சாமான்கள் வாங்குவது அதிகரித்துள்ளது.
ஆனால், ஆள்கள் பற்றாக்குறை, பொருள்கள் தட்டுப்பாடு, நேரக்கட்டுப்பாடு ஆகிய காரணங்களால் நிறுவனங்கள் சேவையை முறையாக வழங்க முடியாத நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆர்டரும் கோளாறும்
பிரபல நிறுவனங்களின் இணையதளம், செயலிக்குள் நுழைந்தால், 'தற்போது எங்களால் சேவையை வழங்க முடியவில்லை - சிரமத்திற்கு மன்னிக்கவும்' என்ற வாசகமே வாடிக்கையாளர்களுக்கு வந்துவிழுகிறது. கொடுக்கப்பட்ட ஆர்டர்கள் கிடைக்க பல நாள்கள் ஆவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கிறார்கள். சில இணையதளங்களில் பொருள்களை இன்று ஆர்டர் செய்தால் 16 நாள்களுக்குப் பின்னரே டெலிவரிசெய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதிகளில் நிறுவனங்கள் பொருள்களை வழங்குவதில்லை. ஆர்டரை ரத்துசெய்தால் பணம் திரும்ப கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது எனக் கூறுகிறார்கள். பொருள்களைக் கொண்டுவரும்போது சேதம், தொழில்நுட்பக் கோளாறு என ஆன்லைனில் ஆர்டர்செய்து பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது.
திணறும் ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் நோ ஜீரோ காண்டாக்ட் டெலிவரி
கரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்க டெலிவரி நிறுவனங்கள் ஜீரோ காண்டாக்ட் டெலிவரி எனப்படும் வாடிக்கையாளர்களிடம் தொடர்பில்லாத வகையில் பொருள்களை விநியோகம்செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் நிறுவனங்கள் இதனை முறையாகப் பின்பற்றுவதில்லை, சில ஊழியர்கள் முகக் கவசம்கூட அணிவதில்லை என்ற புகாரும் பொதுமக்களால் வைக்கப்படுகிறது. இதுபோன்ற செயலிகளில் பொருள்களின் விலையும் அதிகமாக உள்ளதாகச் சிலர் கருதுகிறார்கள்.
இன்றும் என்றும் தள்ளுவண்டி
இத்தனை நாள்களாகத் தொடக்க நிலையிலிருந்த மளிகைப் பொருள்களின் டெலிவரி வணிகம், தற்போது திடீரென அதிகரித்துள்ளதால் அதனைச் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இனிவரும் நாள்களில் இந்த நிலை சீராகும் என நம்பலாம். ஆனால் நமது தேவைக்கு வீட்டு வாசலில் வந்து நிற்கும் தள்ளுவண்டி கடைகளே இன்றும் என்றும் உதவும்.