சென்னை:தமிழ்நாடு அரசு வெறும் யூகங்களின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வந்துள்ளதாக, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் இன்று (ஆகஸ்ட் 21ஆம் தேதி) தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தன. விசாரணையின் போது,
ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம்,
- திறமையை நம்பி நேரடியாக பந்தயம் வைத்து விளையாடும் விளையாட்டு சூதாட்டமாகாது. அதனால், ஆன்லைன் மூலமாக பந்தயம் வைத்து விளையாடப்படும் விளையாட்டு திறமைக்கானது அல்ல சூதாட்டமே என்ற தமிழக அரசு தரப்பு வாதம் ஏற்கத்தக்கதல்ல.
- ஆன்லைன் விளையாட்டுக்களை பொறுத்தவரை, ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.
- ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் கூட்டமைப்பில் கடுமையான விதிகள் சுய ஒழுங்கு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
- ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்தலாமே தவிர, தடை விதிக்க முடியாது.
- ஒரே செயலை ஆன்லைனில் மேற்கொள்வது சட்டவிரோதம் எனவும், நேரில் மேற்கொள்வது என்பது சட்டப்படியானது எனவும் வகைப்படுத்த முடியாது.
- வெறும் யூகங்களின் அடிப்படையில், எந்த உண்மை தகவல்களும் இல்லாமல் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
- ஆன்லைனில் விளையாட ஒரு மேடையை அமைத்து தரும் நிறுவனங்கள், அதற்கு கட்டணம் வசூலிக்கிறது. அந்த கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி. வரியும் கட்டுகின்றன இதனை சூதாட்டம் நடத்துவதாக கூற முடியாது. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதில்லை
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை. எனவே இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தொிவிக்கப்பட்டது.