சென்னை: ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் அவசரச் சட்ட மசோதாவுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சுமார் நான்கு மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட அந்த மசோதாவை கடந்த மார்ச் 8ஆம் தேதி ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான அதிகாரம் தமிழக சட்டப்பேரவைக்கு இல்லை என்று கூறி மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.
அதன் பிறகு, ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான மசோதாவை கடந்த மாதம் தமிழக அரசு மீண்டும் பேரவையில் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. இதனிடையே தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, சட்டப்பேரவையில் இன்று(ஏப்.10), தமிழக அரசு சார்பில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தனித் தீர்மானத்தின் மீது உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பும் தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போடுவது குறித்து கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாகவும், அரசியல் ரீதியாக செயல்படுவதாகவும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் விமர்சித்திருந்த நிலையில், திடீரென ஆளுநர் ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.
ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்கு பாஜகவினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆளுநரின் இந்த முடிவு அரசியலுக்கு அப்பாற்பட்ட நல்ல முடிவு என்றும், கட்சிகளைப் போலவோ, கட்சிகளை சார்ந்தோ ஆளுநரால் முடிவு எடுக்க முடியாது என்றும் பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.