சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஆய்வு செய்த ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அரசுக்கு சில பரிந்துரைகளை வழங்கின. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இணையவழி விளையாட்டுக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளி ஆசிரியர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களும் பட்டியலிடப்பட்டன. தற்போது ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அரசிதழில் வெளியிடப்பட்ட பின் சட்டம் நடைமுறைக்கு வரும்.
கட்டுப்பாடுகள்: இணையவழி சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பணம் அல்லது பிற பந்தயப் பொருட்களைக் கொண்டு விளையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இணையவழி விளையாட்டை வழங்குநர் எவரும், இணையவழி சூதாட்டங்களின் சேவையினை வழங்கவோ அல்லது இணைப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இணையவழி வாய்ப்பு விளையாட்டு எதனையும் பணம் அல்லது பிற பந்தயப் பொருட்கள் கொண்டு விளையாடுவதையோ அல்லது ஒழுங்குமுறை விதிகளை மீறுகின்ற பிற இணையவழி விளையாட்டு எதனையும் விளையாடுவதையோ எந்த வடிவிலும் அனுமதித்தல் கூடாது.
விளம்பரம் செய்யத் தடை: இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கோ அல்லது இணைப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இணையவழி வாய்ப்பு விளையாட்டு எதனையும் பணம் அல்லது பிற பந்தயப் பொருட்களைக் கொண்டு விளையாடுவதற்கோ, நபர் எவரையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஊக்குவிக்கின்ற அல்லது தூண்டுகின்ற எதனையும் மின்னணு தொடர்பு வழிமுறைகள் ஊடகம் எதிலும் நபர் எவரும் விளம்பரம் செய்யக் கூடாது. நிதி நிறுவனம், கட்டண நுழைவு வாயில் வழங்குநரும் (வங்கிகள்) இணையவழி சூதாட்டத்துக்கு பணம் செலுத்துவதற்கான எந்தவொரு பரிவர்த்தனை அல்லது நிதி அங்கீகாரத்திலும் ஈடுபடுதல் கூடாது.