சென்னையில் உள்ள தக்ஷிண பாரத் ஹிந்தி பிரச்சார சபாவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய தென் மாநில மாணவர்களுக்கு இந்தி மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது.
அவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பருவ தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதம் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் கடந்த மார்ச் முதல் மாணவர்கள் இந்தி வகுப்பிற்கு வர முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் தொடர்ந்து இந்தி கற்பதற்கான நடவடிக்கைகளையும், ஆறு மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் தேர்வினை நடத்தவும் தக்ஷிண பாரத் ஹிந்தி பிரச்சார சபா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்தி படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு என பேட்டி இது குறித்து அதன் பொதுச்செயலாளர் ஜெயராஜ் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், "ஹிந்தி பிரச்சார சபா பிப்ரவரி மாதம் மாணவர்களுக்கான தேர்வினை நடத்தி மார்ச் மாதம் தேர்வு முடிவுகளை அறிவித்தோம்.
அதனைத் தொடர்ந்து மாணவர்கள் அடுத்த கோர்ஸில் சேர்ந்தனர். உலகளவில் கரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் இந்தி படிக்கும் மாணவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. அறிவியல் வளர்ச்சியின் மூலம் உலகளவில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் இந்தி படிக்கும் மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இதற்கான தேர்வுகளை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் நடத்தலாம் என திட்டமிட்டிருந்தோம்.
ஆனால் கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அப்போதும் தேர்வினை நடத்த முடியுமா எனத் தெரியவில்லை. எனவே ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தலாம் என திட்டமிட்டுள்ளோம்.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த ஒரு பருவத்திற்கு மட்டும் பாடத்திட்டத்தினை 50 விழுக்காடு குறைத்து ஹிந்தி கற்றுத்தரும்படி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
மாணவர்களுக்கான பாடங்கள், தேர்வு குறித்த விபரங்கள் dbhpscentral.org என்ற இணையத்தில் வெளியிட்டுள்ளோம். தேர்வு நடைபெறும் நாள் அன்று ஒரு மணி நேரம் முன்னதாக கேள்வித்தாளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வோம்.
மாணவர்கள் கேள்வி தாளிலேயே பதில் எழுதும் வகையில்தான் இருக்கும். அதனை அவர்கள் பதிவிறக்கம் செய்து கொண்டு அவருக்கு கற்றுத்தரும் இந்தி ஆசிரியர்கள் முன்னிலையில் தேர்வினை எழுத வேண்டும்.
முதல் முறையாக தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்குரிய கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: யுபிஎஸ்சி சர்வீஸ் தேர்வு: அகில இந்திய அளவில் ஏழாம் இடம் பிடித்த தமிழர்