தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கவர்ச்சி அறிவிப்புகளால் ஆன்லைன் நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கின்றன- தமிழக அரசு வாதம்! - chennai high court news today

கவர்ச்சி அறிவிப்புகளால் மக்களை அடிமையாக்கி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் பணம் சம்பாதிப்பதாக, தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

கவர்ச்சி அறிவிப்புகளால் ஆன்லைன் நிறுவனங்கள் பணம் சம்பதிக்கின்றன: தமிழக அரசு வாதம் !
கவர்ச்சி அறிவிப்புகளால் ஆன்லைன் நிறுவனங்கள் பணம் சம்பதிக்கின்றன: தமிழக அரசு வாதம் !

By

Published : Aug 14, 2023, 7:54 PM IST

சென்னை :ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகள், தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது தமிழக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஆன்லைனில் விளையாடுபவர்கள் வழக்கு தொடரவில்லை. விளையாட்டை நடத்துபவர்கள் தான் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். கிளப்களுக்கு வெளியில் ரம்மி விளையாட தடை விதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆன்லைனில் 24 மணி நேரமும் விளையாட முடியும். குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் விளையாடக் கூடாது என கட்டுப்பாடு விதிக்க முடியாது என்றார்.

வீட்டில், அலுவலகத்தில் இருந்து ஆன்லைனில் விளையாட முடியும் என்பதால் இதை முறைப்படுத்த இயலாது. கிளப்களில் மாலை நேரங்களில் தான் ரம்மி விளையாட அனுமதிக்கப்படுகிறது என வாதிட்டார்.

5,000 ரூபாய் செலுத்தி விளையாடினால் 5250 ரூபாயை வழங்குகிறார்கள். இது நேரடியாக விளையாடும் போது நடக்காது. ஒரு நண்பரை சேர்த்தால் 5000 ரூபாய் வழங்குகிறார்கள். இதுபோல வேறு ஏதேனும் திறமைக்கான விளையாட்டுக்கு வழங்குகிறார்களா? எனக் கேள்வி எழுப்பினார்.

போனஸ்களும் வழங்கி அடிமையாக்குகின்றனர். இதன் மூலம் விளையாட்டு நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கின்றன என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் குற்றம் சாட்டினார். வழக்கமான ரம்மி விளையாட்டை விட இது முழுக்க முழுக்க வித்தியாசமானது. இதை அனுமதிக்க கூடாது என்பதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. 2,000 கோடி ரூபாய் வரை ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சம்பாதிக்கின்றன எனத் தெரிவித்தார்.

இதை அனுமதித்தால் எல்லா விளையாட்டுக்களிலும் நுழைந்து விடும். ஆன்லைனில் விளையாடுபவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடியாது. எதிரில் விளையாடுபவர் யார் என்றோ, கார்டுகளை கலைத்து போடுபவர் யார் என்றோ தெரியாது என்றார். போனஸ் போன்ற கவர்ச்சி அறிவிப்புகளால் அடிமையாக்கி, சட்டம் ஒழுங்கு பிரச்னையை உருவாக்கி பொது ஒழுங்கை பாதிக்கச் செய்கிறது என, நீதிபதி சந்துரு அறிக்கையைச் சுட்டிக்காட்டி விளக்கினார்.

மற்றவர்களின் திறமையை பயன்படுத்தி, ஆன் லைன் விளையாட்டு நிறுவனங்கள் சம்பாதிக்கின்றன. இந்த சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. சூதாட்டத்தில் திறமை கிடையாது எனத் தெரிவித்தார். தமிழகத்தில் தான் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட மற்ற மாநிலங்களில் விளையாட்டுக்களை நடத்த தடையும் இல்லை. மாநில மக்களின் குறிப்பாக சிறார்கள் நலனை பாதுகாக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். ஆன்லைன் நிறுவனங்கள், மக்களை சுரண்டி, சூதாட்டம் நடத்துவது அடிப்படை உரிமையல்ல.

இந்த வழக்குகள் விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி, வாதங்களை நிறைவு செய்தார்.தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் வாதங்களுக்காக வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 17ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:"நீட் மசோதாவில் தாமதம் வேண்டாம்" - குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details