தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Nursing Application: நர்ஸிங், பிபார்ம் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! - including BSc BPharm

தமிழ்நாட்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் 2023-2024ஆம் கல்வி ஆண்டில் சேர்வதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் அறிவித்துள்ளார்.

Nursing Application
நர்ஸிங்

By

Published : Jun 18, 2023, 10:21 PM IST

Updated : Jun 19, 2023, 12:03 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 2023-2024ஆம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு 19ஆம் தேதி காலை 10 மணி முதல் 28ஆம் தேதி மதியம் 5 மணி வரையில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் இன்று (ஜூன் 18) அறிவித்துள்ளார்.

அரசு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் உள்ள இடங்களின் விபரங்களையும், அந்தப் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு குறித்தும் இந்தத் தொகுப்பில் காணலாம். தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பிஎஸ்சி மற்றும் பிஓடி, பிபிடி, பி பார்ம் , பிஏஎஸ்எல்பி ஆகிய பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு விண்ணப்பங்கள் நாளை முதல் ஆன்லைன் மூலம் பெறப்படுகிறது.

ஜூன் 28 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: இவை குறித்த தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களுக்கும் www.tnhealth.tn.gov.in / www.tnmedicalselection.org என்ற இணையதள முகவரியில் நாளை வெளியிடப்பட உள்ளது. இதற்கு வரும் ஜூன் 28 ஆம் தேதி மாலை 5 மணி வரையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் விண்ணப்பிக்க விரும்பும் பாடப்பிரிவுகளை தெரிந்துக்கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

B.pharm உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு அட்மிஷன் நாளை ஆரம்பம்

19 அரசு மருத்துவக் கல்லூரியில் 2,536 இடங்கள்: மேலும், மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் சென்றும் விண்ணப்பிக்கலாம். மாணவர்களுக்கான கலந்தாய்வு ஒற்றை சாளரமுறையில் நடத்தப்படும். 2022-23 ஆம் கல்வியாண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் தமிழ்நாட்டில் 19 பட்டப்படிப்புகள் 19 அரசு மருத்துவக் கல்லூரியில் 2,536 இடங்கள் இருக்கின்றன. தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் 4 விதமான பட்டப்படிப்புகளில் 22,200 இடங்கள் இருக்கின்றன. அவற்றில், 14 ஆயிரத்து 157 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கு அளிக்கப்பட்டு இருந்தது.

2023-2024 ம் கல்வியாண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் தமிழ்நாட்டில் 19 பட்டப்படிப்புகள் 19 அரசு மருத்துவக் கல்லூரியில் 2,526 இடங்கள் இருக்கின்றன. தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் 4 விதமான பட்டப்படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டில் 14 ஆயிரத்து 157 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு தமிழ்நாடு அரசு அல்லது அதற்கு சமமான குழுமத்தால் நடத்தப்படும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் (அல்லது) இயற்பியல், வேதியியல், உயிரியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை எடுத்து படித்து இருக்க வேண்டும்.

பிஎஸ்சி நர்சிங் பட்டப்படிப்பு:இந்த படிப்புக்கு சென்னை, மதுரை, செங்கல்பட்டு, சேலம், தேனி,கடலூர் ஆகிய மருத்துவக்கல்லூரியில் 350 இடங்கள் உள்ளது. 4 ஆண்டு கால படிப்பாகும். உடற்கூறியல், செயலியல், உயிர்வேதியியல், உணவு வகைகள், மருந்துகள், நுண்ணுயிர் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை சார்ந்த செவிலியர் படிப்பு, நோய்கூறு இயல், மன உளவியல், சமூகவியல், அறுவை அரங்க முறைகள் ஆகியவை பற்றி பயிற்றுவிக்கப்படுகிறது. செவியியர் வேலையானது பலவிதமான நோயாளிகளை கையாளக்கூடிய புனிதமான வேலை.

பி பார்ம் (B.pharm) 4 ஆண்டு கால பட்டப்படிப்பு:இந்த படிப்புக்கு சென்னை மற்றும் மதுரை மருத்துவக் கல்லூரியில் 120 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். மருந்துகள் தயார் செய்வது மற்றும் அவற்றை பற்றி ஆராய்ச்சி செய்வது அவற்றை நோய் தீர்க்க எப்படி பயன்படுத்துவது? என்பது பற்றிய படிப்பாகும். படித்துமுடித்தபின் மருந்தாளுநராக ஆகலாம், மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளில் அவற்றை தயாரிப்பது மற்றும் தரக் கட்டுப்பாடு ஆகிய பிரிவுகளில் பணியாற்றலாம்.

இயன்முறை மருத்துவம் B.P.T. COURSE: இந்த படிப்புக்கு சென்னை மறுவாழ்வு ஆராய்ச்சி நிறுவனம், திருச்சி பிசியோதெரபி கல்லூரி, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் இயன்முறை மருத்துவப் படிப்பில் 80 இடங்கள் உள்ளது. 4 ஆண்டு கால பட்டப்படிப்பும் மேலும் 6 மாதம் நேரடி உள்ளிருப்பு பயிற்சி அளிக்கப்படும். மக்களுக்கும், நோயாளிகளுக்கும் உடலியங்கு சிகிச்சை கொடுக்கும் முறைகள் பற்றி கற்றுக் கொள்ள வேண்டும். உடற்கூறு இயல், செயலியல் உடற்பயிற்சி முறைகள், முடநீக்குஇயல் ஆகிய பாடங்களை படிக்க நேரிடும். மக்களுக்கும், நோயாளிகளுக்கும் உடலியங்கு சிகிச்சை செய்யலாம். பக்கவாதம் மற்றும் எலும்பு முறிவு சிகிச்சை பெறுபவர்கள் தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிக்கு உடலியங்கு, மூச்சுப்பயிற்சி தேவைப்படும். மக்களின் உடல்நலனை மேம்படுத்த உடலியங்கு பயிற்சி நிலையங்கள் உருவாக்கலாம்.

லேப் தொடர்பான படிப்புகள்:இந்த படிப்புக்கு12 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 220 இடங்களில் பிஎஸ்சி கதிரியக்க ஆய்வு நூல் ஊடுகதிர் பற்றிய 3 ஆண்டு கால பட்ட படிப்பும் மேலும் 1 ஆண்டு உள்ளிருப்பு நடைமுறை பயிற்சி வழங்கப்படும். உடற்கூறு இயல், செயலியல், எக்ஸ்ரே,. எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் ஆகியவை பற்றி படிக்க வேண்டும். படித்து முடித்தபின் மருத்துவ கதிரியக்கத் துறையில் மற்றும் எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் மையங்களில் பணிபுரிய வாய்ப்புகள் உள்ளன.

பிஎஸ்சி ரேடியோதெரபி தொழில்நுட்பம் (B.Sc Radiotherapy Technology): இந்த படிப்புக்கு சென்னை, கீழ்ப்பாக்கம், மதுரை, காேயம்புத்தூர் ஆகிய மருத்துவக்கல்லூரிகளில் 50 இடங்கள் உள்ளது. 4 ஆண்டு படிப்பாகும். புற்றுநோய் தாக்கியவர்களுக்கு கதிரியக்க சிகிச்சை அளிப்பது பற்றிய படிப்பாகும். இதில் உடற்கூறுஇயல், செயலியல், புற்றுநோய் வகைகள், கதிரியக்க முறைகள், அவைசார்ந்த இயற்பியல் ஆகிய பாடங்களை பற்றி படிக்க வேண்டும். படித்து முடித்தபின் கதிரியக்க சிகிச்சை கருவி உள்ள புற்றுநோய் மையங்களில் பணிபுரிய வாய்ப்புகள் உள்ளன.

பிஎஸ்சி கார்டியோ (B.Sc Cardio - pulmonary Perfusion Technology):இந்த படிப்புக்கு சென்னை, ஸ்டான்லி, திருநெல்வேலி, மதுரை மருத்துவக்கல்லூரிகளில் 35 இடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. பெர்பியுசனிஸ்ட் என்பவர் இருதய பைபாஸ் அறுவை சிகிச்சையின் போது உபயோகப்படுத்தப்படும் ஹார்ட்லங் மெசினை இயக்குபவர். இந்தப் பயிற்சியின் போது உடற்கூறுஇயல், செயலியல், உயிர்-வேதியியல், நோய்கூறு இயல், நுண்ணுயிரியல், இரத்தபரவல், இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சை அரங்கு சுத்தப்படுத்துதல், ஆகியவற்றை பற்றி கற்றுக்கொள்ள வேண்டும். இந்தப்படிப்பு படித்தவர்களின் தேவை தற்போது அதிகம் உள்ளது. ஆனால் அவர்கள் இந்த வேலையை சிறப்பாக செய்ய சிறந்த தொழிற்நுட்ப அறிவு, கடின உழைப்பு, தொழில் அர்ப்பணிப்பு ஆகியவை தேவை.

பிஎஸ்சி மெடிக்கல் லேபாட்டரி தொழில்நுட்பம் (B.Sc (Medical Laboratory Technology): இந்த படிப்புக்கு தமிழ்நாட்டில் 12 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 230 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். உயிர்வேதியியல், நோய்கூறுஇயல், நுண்ணுயிரியல் மற்றும் இரத்த வங்கி சேவைகள், இரத்தம், மலம், சிறுநீர் போன்றவற்றை பரிசோதனை செய்து நோயைக் கண்டுபிடிக்கும் முறைகள் பற்றி படிக்க வேண்டும். படித்து முடித்தபின் ஆய்வக நுட்புனராக ஆய்வகங்களிலோ, இரத்த வங்கியிலோ பணிபுரிய வாய்ப்புகள் உள்ளன.

B.Optom, (Bachelor of Optometry):இந்த படிப்புக்கு தமிழ்நாட்டில் உள்ள ஸ்டான்லி, செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, தருமபுரி , எழும்பூர் கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் 115 இடங்கள் உள்ளன. கண் மருத்துவ பரிசோதகராக கண் மருத்தவமனைகளில் பணிபுரிய வாய்ப்புகள் உள்ளன.

பிஎஸ்சி ஆப்ரேசன் தியேட்டர் மற்றும் மயக்க மருந்து தொழில்நுட்பம் (B.Sc Operation Theatre & Anaesthesia Technology): இது 4 ஆண்டு பட்டப்படிப்பாகும். 14 அரசு மருத்துவக்கல்லூரிகளில் 280 இடங்களில் சேர்க்கை நடைபெற உள்ளது. அறுவை அரங்குகளின் சுத்தம் மற்றும் அங்குள்ள கருவிகளை பராமரிப்பது, அறுவைசிகிச்சையின் போது மருத்துவருக்கும், செவிலியருக்கும் அவர்கள் இட்ட பணிகளை செய்து உதவுவது இவர்களுடைய வேலை ஆகும். படித்து முடித்தபின் மருத்துவமனையில் விபத்து, அவசர சிகிச்சை பகுதிகள், தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் அறுவை அரங்குகளில் பணிபுரிய வாய்ப்புகள் உள்ளன.

பிஎஸ்சி கார்டியாக் தொழில்நுட்பம் (B.Sc Cardiac Technology):இந்த படிப்புக்கு 10 அரசு மருத்துவக்கல்லூரிகளில் 146 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு, 4 ஆண்டுகள் பட்டப்படிப்பு அளிக்கப்படுகிறது. இருதய நோயாhளிகளின் பிரச்சனைகள், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள், சிகிச்சைக்கு தேவையான கருவிகளை கையாளுதல், அவர்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகளான இருதய மின் வரைபடம், ட்ரெட்மில் பரிசோதனை, இருதய வடிகுழாய் மூலம் இருதயஅடைப்புகளைக் கண்டறிதல் ஆகியவை பற்றி படித்து செயல் முறை அறிவும் பெற வேண்டும். இவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட இருதய சிகிச்சை மையங்களில் வேலை வாய்ப்புகள் உண்டு.

பிஎஸ்சி தீவிர சிகிச்சை தொழில்நுட்பம் (B.Sc Critical Care Technology):இந்த படிப்புக்கு 7 அரசு மருத்துவக்கல்லூரிகளில் 130 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது. அவர்களைப் பராமரிப்பது ஆகியவை பற்றி படிக்கும் பட்ட படிப்பு. இவர்கள் செயற்கை சுவாச முறைகள், திரவங்களை நோயாளிகளின் உடலுக்குள் செலுத்தும் குழாய்கள், அவற்றை பராமரிக்கும் முறைகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் பணிபுரிய வாய்ப்புகள் உள்ளன.

பிஎஸ்சி பிசிசியன் அசிஸ்டென்ட் (B.Sc Physician Assistant):இந்த படிப்புக்கு 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 220 இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் சார்ந்த கல்வியையும், பயிற்சிகளையும் திறம்பட கற்க வேண்டும். நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை முறைகளை ஒரு மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் செய்ய வேண்டும். சிறுவெட்டுக்காயங்கள், சிறு வியாதிகளுக்கு சிகிச்சை செய்யும் முறைகளைக் கற்று சிகிச்சை செய்யலாம். அவசர சிகிச்சை முதலுதவி செய்யலாம், இவர்கள் படிப்பு முடித்தபின் மருத்துவருக்கு உதவியாளராக பணிபுரிய வாய்ப்புகள் உள்ளன.

பிஎஸ்சி விபத்து மற்றும் அவசர சிகிச்சை தொழில்நுட்பம் (B.Sc Accident & Emergency Care):இந்த 4 ஆண்டுகள் பட்டப்படிப்பு 10 அரசு மருத்துவக்கல்லூரியில் 200 இடங்களில் அளிக்கப்பட்டுள்ளது. விபத்து மற்றும் அவசரசிகிச்சை பகுதிக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள், அதற்கு தேவையான கருவிகளை கையாளும் முறைகள் பற்றி படிக்க வேண்டும். அதன் முடிவில் சிகிச்சை முறைகள் மற்றும் கருவிகளைப் பற்றிய முழு அறிவும், திறமையும் கிடைக்கும். படித்து முடித்தபின் மருத்தவமனைகளில் விபத்து மற்றும் அவசரசிகிச்சை பிரிவு, அவசரகால ஊர்திகளில் பணிபுரிய வாய்ப்புகள் உள்ளன.

பிஎஸ்சி ரெபிசிரேட்டரி தொழில்நுட்பம் (B.Sc Respiratory Therapy): இந்த படிப்புக்கு தமிழ்நாட்டில் 7 அரசு மருத்துவக்கல்லூரியில் 134 இடங்கள் உள்ளது. நாட்டில் காற்றில் மாசுத்தன்மை அதிகரித்துகொண்டே போவதால், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆகவே அதற்கென தனிபிரிவு தொடங்கப்பட்டு நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களை கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்கும் முறைகளை கற்றுக் கொடுக்கப்படுகிறது. நுரையீரல் செயல்படும் தன்மையை கண்டுபிடிக்கும் ஸ்பைரோ மெட்ரி கருவி, நுரையீரல் ஊடு சோதிப்பு கருவி, செயற்கை சுவாச கருவிகள் ஆகியவற்றை கையாளும் முறைகள் தெரிய வேண்டும். நோயாளிகளுக்கு சுவாசப் பயிற்சி அளிக்க பழக வேண்டும்.இவர்கள் மேற்கண்ட கருவிகள் உள்ள ஆய்வகங்களிலும், தீவிர சிகிச்சை பிரிவுகளிலும் பணிபுரிய வாய்ப்புகள் உள்ளன.

B.O.T (Occupational Therapy):இந்த படிப்புக்கு கீழ்ப்பாக்கம், கடலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் 30 இடங்கள் உள்ளது. நோயினாலோ, விபத்தினாலோ உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், குறைபாடுள்ள குழந்தைகள் ஆகியோர் தங்களது தினசரி வாழ்வை வாழ உதவும் முறைகள் பற்றிய படிப்பாகும். முதலாம் ஆண்டு உடற்கூறுஇயல், செயலியல் ஆகியவற்றை படிக்க வேண்டும். இரண்டாம் ஆண்டு நோய்களின் தன்மை அவற்றை கண்டுப்பிடிக்கும் முறைகள்பற்றி கற்க வேண்டும். மூன்றாம் ஆண்டு நரம்பியல், மனநோய்கள், குழந்தைகளின் நோய்கள் பற்றி படிக்க வேண்டும். புனர்வாழ்வு மையங்களில் பணிபுரிய வாய்ப்புகள் உள்ளன.

B.A.S.L.P படிப்பு:இந்த படிப்புக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் செவிதிறன் மற்றும் பேச்சுப் பயிற்சி அளிக்கும் படிப்பில் 25 இடங்கள் உள்ளது. இது 3 வருட கால பட்டப் படிப்பிற்கு. பின் 1 வருட உள்ளிருப்பு நடைமுறை பயிற்சியும் அளிக்கப்படும். செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் அவற்றில் ஏற்படும் குறைபாடுகள் ஆகியவை பற்றி படிப்பது. அதனுடன் உடற்கூறு இயல், செயலியல், மன உளவியல், மொழியியல் ஆகிய பாடங்களையும் படிக்க வேண்டும்.

மனிதர்களின் செவித்திறன் குறைபாடுகளை கண்டுபிடித்தல், செயற்கை காது கேட்கும் கருவிகள் பொருத்துவது, காக்ளியர் இம்பிளான்ட் ஆபரேஷன் செய்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, சத்தம் மற்றும் மொழியியல் குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பது போன்ற வேலைகள் செய்ய வாய்ப்புள்ளது.

பிஎஸ்சி டாயலிசிஸ் தொழில்நுட்பம் (B.Sc (Dialysis Technician): இந்த படிப்புக்கு 12 அரசு மருத்துவக்கல்லூரிகளில் 195 இடங்களில் சேர்க்கப்பட உள்ளனர். உடலில் சிறுநீரகமானது இரத்தத்தை சுத்திகரிக்கும் பணியை செய்கிறது. சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்கு ஹுமோடயாலிசிஸ், பெரிட்டோனியல் டயாலிசிஸ் ஆகியவை செய்யப்படும். இவற்றை பற்றி கற்று பயிற்சி பெறுவதே இந்த படிப்பாகும். படித்து முடித்தபின் சிறுநீரக சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) மையங்களில் பணிபுரிய வாய்ப்புகள் உள்ளன.

B.Sc. Neuro Electro Physiology:இந்த படிப்புக்கு சென்னை, ஸ்டான்லி, தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரியில் 20 இடங்களில் சேர்க்கப்பட உள்ளனர். நரம்பு மண்டலத்தின் நரம்பு செல்கள் மூளை மற்றும் முதுகு தண்டு வழியாக தகவல்களை பெறும்போது மற்றும் அனுப்பும்போது அதன் செயல்பாடு மற்றும் மனநலம் தொடர்புகள் பற்றிய படிப்பாகும். நரம்பியல் அறுவை சிகிச்சை, நரம்பியல் மயக்க மருந்து நிபுணர், மனநல மருத்துவ உளவியலாளர்கள் மற்றும் மறுவாழ்வு மற்றும் தொழில்முறை சிகிச்சை ஆகியவற்றில் மருத்துவ மற்றும் மருத்துவம் அல்லாத துறைகளில் பணியாற்றலாம்.

பிஎஸ்சி ஊட்டச்சத்து மற்றும் உணவு அறிவியல் (B.Sc Clinical Nutrition): இந்த படிப்புக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் 20 இடங்கள் உள்ளது. 3 வருட கால படிப்பு மற்றும் மேலும் 1 வருட உள்ளிருப்பு நடைமுறை பயிற்சி அளிக்கப்படும். ஊட்டச்சத்து மற்றும் உணவு அறிவியல் சார்ந்த படிப்பாகும். மக்களின் உணவு பழக்கம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த வழிகாட்டுதலுடன் அடங்கிய மருத்துவ ஊட்டச்சத்து உணவு மற்றும் தனிநபர் ஆரோக்கியம் பற்றிய படிப்பாகும். இவர்கள் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் ஊட்டச்சத்து நிபுணராகவும் பணியாற்றலாம்.

இதையும் படிங்க: நீட் தேர்வில் 300 மார்க்குக்கு மேல் பெற்ற 591 அரசு பள்ளி மாணவர்கள்!

Last Updated : Jun 19, 2023, 12:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details