வெங்காய விலை சற்று குறைவானது! - வெங்காயம் விலை
சென்னை: மக்கள் வெங்காயம் வாங்குவதை குறைத்ததால் விலை சற்று குறைய தொடங்கியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு காய்கறி சந்தைகளுக்கு மொத்தமாக வெங்காயம் அனுப்பும் வட மாநிலங்கள், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கன மழை காரணமாக வெங்காய விலை கடுமையாக உயர்ந்தது.
ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக கடந்த சில நாட்களாகவே அதன் விலை மேலும் அதிகரித்து வந்தது. இந்த சூழலில், மக்கள் வெங்காயம் வாங்குவது குறைந்துள்ளதாலும், மழை காரணமாக வெங்காயம் சேதமடைந்துள்ளதாலும் அதன் விலை சற்று குறைந்துள்ளதாக மொத்த விலை வியாபாரிகள் கூறுகின்றனர்.
வெங்காயம் மூட்டை ஒன்று தரத்துக்கு ஏற்ப 2,500 ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் இது தற்காலிக மாற்றம்தான் என்றும், படிப்படியாக விலை குறைய சில காலம் ஆகும் எனவும் வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் 40 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சாம்பார் வெங்காயம் 60 முதல் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.