தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செஞ்சூரி அடித்த வெங்காயத்தின் விலை - பொதுமக்கள் அவதி

சென்னை: நாம் உண்ணும் உணவில் சேர்க்கப்படும் அத்தியாவசிய பொருளான வெங்காயத்தின் விலை சதமடித்துள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

onion price heavy rate
onion price heavy rate

By

Published : Nov 26, 2019, 10:32 PM IST

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயம் கிலோ 50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 100 ரூபாய் வரையும், சின்ன வெங்காயம் அதிகபட்சமாக 120 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகளிலும், சூப்பர் மார்கெட்டிலும் கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

வெங்காயத்தின் விலை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஏற்றம் இறக்கம் கண்டுவருகிறது. தமிழ்நாடு அரசு கூட்டுறவு கடைகளில், வெங்காயம் கிலோ 33 முதல் 35 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது. மாம்பலம் காய்கறி சந்தையைப் பொறுத்தவரையில் வெங்காயம் 40, 60, 80 என வெங்காயத்தின் தரத்திற்கேற்ப பல்வேறு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

உயரும் வெங்காய விலை

வெங்காயம் அதிகளவு பயிரிடப்படும் மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களில் மழை பெய்ததன் காரணமாக கடந்த சில நாட்கள் வரை சராசரியாக 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயத்தின் விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் மற்ற காய்கறிகளின் விலை சீரான வகையில் உள்ளது.

இது தொடர்பாக பேசிய வியாபாரி கிருஷ்ணமூர்த்தி, "விளைச்சல் குறைவாக உள்ளதால் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. மொத்த வியாபாரத்தில் வெங்காயம் மூட்டை 5000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், சில்லரை விற்பனையில் கிலோ 110 ரூபாயை தொட்டுள்ளது. இங்கு தரத்திற்கேற்ப பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது" என்று தெரிவித்தார்.

வெங்காய விலை உயர்வு தொடர்பாக பேசிய பத்மா, "சட்னி சாம்பார் என அனைத்திற்கும் வெங்காயம் தேவைப்படுகிறது. வெங்காயத்தின் விலை அதிகமானதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். இதனால் வெங்காயத்தை வாங்குவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளோம். ஒரு கிலோ வாங்க வேண்டிய இடத்தில் அரை கிலோ அல்லது கால் கிலோ வாங்க வேண்டியுள்ளது" என்றார்.

பொதுமக்களின் கருத்து

அனைத்து விதமான சமையலுக்கும் பயன்படுத்தப்படும் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதால் கடுமையான சிரமத்திற்கு ஆளாவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். வெங்காயத்தை பதுக்குவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்பு வெங்காயத்தை வெட்டினால்தான் கண்களில் கண்ணீர் வரும், தற்போது வெங்காயத்தின் விலையை கேட்டாலே கண்களில் கண்ணீர் வந்துவிடுகிறது. இந்த விலையேற்றம் ஏழை எளியோரை மிகவும் பாதிப்படைய வைத்துள்ளது.

கடந்த சில மாதங்களில் வெங்காயத்தின் விலை அடிக்கடி உயர்ந்து வருவதும், பின் அரசு ஏற்றுமதிக்கு தடை விதித்தும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தும் வெங்காய விலையைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதும் தொடர் கதையாகி வருகிறது. வெங்காயத்தின் விலை அடிக்கடி ஏற்ற இறக்கங்களை சந்திக்காமல் இருக்க அரசு உரிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க: விமானத்தில் சுறா மீன்களின் வால், செதில் கடத்தியவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details