தமிழ்நாடு சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பெரிய வெங்காயமானது மகாராஷ்டிரா, கர்நாடகாவிலிருந்து கொண்டுவரப்படுகிறது. ஆனால், தற்போது அந்த மாநிலங்களில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக தமிழ்நாடு சந்தைகளுக்கு பெரிய வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது.
இதன்காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு கிலோ பெரிய வெங்காயம் 40 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது வரத்து குறைவின் காரணமாக ஒரு கிலோ பெரிய வெங்காயம் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரூ.80ஆக உயர்ந்த பெரிய வெங்காயம் அதேபோன்று திண்டுக்கல், திருச்சி பகுதிகளில் விளைவிக்கப்படும் சின்ன வெங்காயம் தொடர்மழை காரணமாக அழுகும் நிலையில் உள்ளது. இதனால், கடந்த வாரங்களில் ரூபாய் 50 முதல் 60 வரையில் விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தின் விலை இன்று 90 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாள்தோறும் 60 லாரிகளில் வரும் வெங்காய மூட்டைகள், தற்போது தொடர் மழையின் காரணமாக 30 லாரிகளில் மட்டுமே வருகிறது. இதனால், வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழை நீடிக்கும் என்பதால் வெங்காயத்தின் விலை விரைவில் கிலோ 100 ரூபாயை எட்டும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சின்ன வெங்காயத்தின் விலை 90 ரூபாயாக உயர்வு திருச்சி வெங்காய கமிஷன் மண்டியில் வெங்காய மூட்டை ஒன்றின் விலை மூன்றாயிரத்து 500 ரூபாயாகவும் ஒரு கிலோ வெங்காயம் 70 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
10 நாள்களுக்கு முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயம் 40 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது. இதனால் இருப்பு வைத்திருந்த வெங்காய விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க : சின்ன வெங்காயத்திற்கு வேர் அழுகல் நோய்: விவசாயிகள் வேதனை!