சென்னை:சென்னை கே.கே. நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல், சேத்துபட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, செயின்ட் ஜார்ஜ் பள்ளி ஆகிய பள்ளிகளிலும் பாலியல் புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து விசாரிக்க தமிழ்நாடு குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியிலும் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக முன்னாள் மாணவர்கள் 900க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுப் புகார் அளித்துள்ளனர்.
செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்திற்கு அளித்துள்ள புகாரில், "செட்டிநாடு பள்ளியில் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து கடந்த காலங்களில் பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டன.
பாலியல் ரீதியாகவும், உடல் அமைப்பை வைத்தும், கெட்ட வார்த்தைகளால் திட்டியும் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். பல ஆண்டுகளாகப் புகார் அளித்தும் நிர்வாகத் தரப்பில் உரிய விசாரணை நடத்தப்படவில்லை. பள்ளியில் உள்ள ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் எனப் பலர்மீது கொடுக்கப்பட்ட புகார்களில், ஒன்றின் மீதுகூட இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை.