தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Indian 2: மீண்டும் தொடங்கிய இந்தியன் - 2 படப்பிடிப்பு

சென்னை விமான நிலையத்தில் நடைபெற்று வந்த இந்தியன் 2 படப்பிடிப்புக்கு முறையான அனுமதி பெறவில்லை என காவல் துறையினர் படப்பிடிப்பை நிறுத்தினர்.

சென்னை விமான நிலையத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பை நிறுத்திய போலீசார்
சென்னை விமான நிலையத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பை நிறுத்திய போலீசார்

By

Published : Jun 20, 2023, 1:05 PM IST

Updated : Jun 20, 2023, 1:59 PM IST

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம், இந்தியன் 2. கடந்த 1996ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகி வருகிறது. பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன.

காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்ஜே சூர்யா என நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான போதும், சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே படப்பிடிப்பு பணிகள் தொடங்கின.

அதன் பிறகும், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கரோனா பரவல் காரணமாக பணிகள் தாமதமானது. இதனையடுத்து, அண்மையில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. தைவான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும், சென்னையில் செட் அமைத்தும் படப்பிடிப்பு நடந்தது. தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்பு பணிகள் நடப்பதாக படக்குழு தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த விமான நிலைய ஆணையத்தில் 1.24 கோடி ரூபாய் செலுத்தி அனுமதி பெற்றதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, படப்பிடிப்பு தளத்திற்குச் சென்ற காவல் துறையினர், திடீரென படப்பிடிப்பை நிறுத்தினர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், காவல் நிலையத்தில் அனுமதி பெறாமல் எப்படி படப்பிடிப்பு நடத்துகிறீர்கள் என போலீசார் கேட்டுள்ளனர்.

மேலும், விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்ற சான்றிதழை காண்பிக்கும்படியும் கேட்டுள்ளனர். இதனையடுத்து படக்குழு சென்னை விமான நிலையத்தில் அனுமதி பெற்ற சான்றிதழை போலீசாரிடம் காண்பித்துள்ளனர். இருப்பினும், விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடத்தப்படும்போது, பயணிகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க காவல் துறை அனுமதி பெற்று, காவலர்களை பணியமர்த்த வேண்டும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

பின்னர், சென்னை விமான நிலைய ஆணையத்திடம் அனுமதி பெற்றுவிட்டதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து மீண்டும் படப்பிடிப்பை தொடங்க காவல் துறையினர் அனுமதித்தனர்.

இதையும் படிங்க:மாமன்னன் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு!

Last Updated : Jun 20, 2023, 1:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details