சென்னை :தமிழ்நாட்டில் ஈரோடு, தேனி, சேலம், வேலூர், திண்டுக்கல், திருப்பத்தூர், தர்மபுரி ஆகிய 7 மாவட்டங்களில் மலைகள் அதிகம் உள்ள 20 ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியர் மலைக்கு கீழ் பகுதியில் உள்ள சமவெளியில் பணிபுரியவே விரும்புகின்றனர். ஆனால், மலையின் மேல் பகுதிக்கு சென்று பணிபுரிய விரும்புவதில்லை.
இந்த நிலையில் மலையின் மேல் பகுதியில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் மலைச் சுழற்சிக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை திருத்தம் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா அதிரடியாக அறிவித்துள்ளார்.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், “மலைப்பாங்கான இடங்களில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை பணி மாறுதல் செய்வதற்கு ஏற்கனவே வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. தற்பொழுது தொடக்கக்கல்வி இயக்கத்தின் கீழ் மலைப் பகுதிகளில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மலைச் சுழற்சி மாறுதல் கலந்தாய்விற்கு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன.
மலைச்சுழற்றி மாறுதல்கள் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் என அனைவருக்கும் பொருந்தும்.