சென்னை: கோடம்பாக்கம் பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஏஞ்சல் டிரேடர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தவர் தியாகப் பிரகாசம் (43). இவர் குறிப்பாக www.aangeltrading.com என்ற வலைதளம் மூலம் 100 நாட்களில் அளித்த பணம் இரட்டிப்பாக்கி திருப்பி அளிக்கப்படும் என்ற விளம்பத்தை வெளியிட்டு வாடிக்கையாளர்களை ஈர்த்து வந்துள்ளார்.
மேலும், இணையதளத்தில் பதிவு செய்யும் நபர்கள் எம்.எல்.எம் முறையில் கூடுதலாக ஆள் சேர்த்தால் கமிஷனாக ஒரு தொகை தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் கோடிக் கணக்கில் பணத்தை செலுத்தியுள்ளனர்.
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம்
ஆனால், தியாகப் பிரகாசம் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்ற பணத்தை ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ததில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, நிறுவனத்தை மூடிவிட்டுக் கடந்த 2019ஆம் ஆண்டு தலைமறைவாகியுள்ளார்.
இதையறிந்த பாதிக்கப்பட்ட மக்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மீண்டும் தூசி தட்டிய போலீஸ்
முன்னதாக சுமார் இவர் மீது சுமார் 46 பேர் அளித்த புகார்களின் அடிப்படையில், தியாகப் பிரகாசம் 1.5 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இவ்வழக்கானது மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், நாளடைவில் இவ்வழக்கு கிடப்பில் போடப்பட்டது. அதன் பின்னர், பணத்தை இழந்தவர்கள் விசாரணையைத் துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, மீண்டும் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் களத்தில் இறங்கினர்.