சென்னை:சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்துள்ள சூழலில், அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை ‘ஆபரேஷன் காவேரி’ என்ற திட்டத்தின் மூலம் மீட்கும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சூடானில் இருந்து மீட்கப்படும் தமிழர்களை, தமிழ்நாடு அரசின் செலவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை அயலக தமிழர் நலவாழ்வுத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, இன்று (ஏப்ரல் 29) அதிகாலை 1 மணியளவில் டெல்லியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் மேலும் 9 தமிழர்கள் சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தனர். இதன்படி சென்னை விமான நிலையம் வந்தடைந்த சென்னை ஐயப்பன் தாங்கல் மற்றும் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பழனிச்சாமி அய்யாதுரை,
சரத்குமார் சீனிவாசன், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் முத்துசாமி, நிதிலன் வெங்கடேசன், தீபா வெங்கடேசன், தவசீலன் ஆணை முத்து மற்றும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பிறை சூடன் தினேஷ், கவியரசி தர்மலிங்கம், தினேஷ் கோவிந்தராஜ் ஆகிய 2 பெண்கள் உள்பட 9 பேருக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்பளித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், “சூடானில் இருந்து இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த 96 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசின் நடவடிக்கையால் சூடான் நாட்டில் உள்ள தமிழர்கள் உள்பட இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வருகின்றனர்.
அடுத்தடுத்த நாட்களில் டெல்லி, மும்பை வழியாக தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள். டெல்லியில் இருந்து தமிழ்நாடு அரசு செலவில் விமானங்களில் சென்னை, மதுரை ஆகிய இடங்களுக்கு அழைத்து வரப்பட்டு, அவரவர் சொந்த ஊர்களுக்கு அரசு வாகனங்களில் அனுப்பி வைத்து இருக்கிறோம். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது” என கூறினார்.