சென்னை கொளத்துரைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவன நிர்வாகி திலகராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் முன்பு அவர்கள் தங்குவதற்கு சமூக நல கூட விவரங்கள் அறிவிக்க வேண்டும், வெளியூர் செல்வதற்கான ரயில் விவரங்களை இணையதளத்தில் ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளிலும் வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்யநாரயணன், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், வெளி மாநில தொழிலாளர்களை அவர்கள் சொந்த மாநிலத்துக்கு அனுப்ப சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, மற்ற மாநில அதிகாரிகளுடன் பேசி வெளிமாநில தொழிலாளர்களை அனுப்பவது தொடர்பாக ஒருங்கிணைக்கும் பணி நடந்து வருவதாகத் தெரிவித்தார்.