சென்னையில் உணவக உரிமையாளரிடம் நகைகளை விற்பனை செய்து தருவதாகக் கூறி, 1.3 கிலோ தங்க நகைகளைப் பெற்று மோசடி செய்த இருவரில் ஒருவரை போலீசார் கைது செய்ததோடு, அவரிடமிருந்து ரூ.20 லட்சம் பணம், 4 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். நுங்கம்பாக்கத்தில் ஃபெரோஸ் என்பவர் உணவகம் நடத்தி வந்த நிலையில், உணவகம் நஷ்டம் அடைந்ததால் தன்னிடமிருந்த வைத்திருந்த நகைகளை விற்க திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில் ஃபெரோஸின் நண்பர் ஒருவர் மூலம், நுங்கம்பாக்கம் பகுதியில் வசிக்கும் சதாம் என்பவர் அறிமுகமாகியிருந்தார். இந்த சதாம் துபாயில் வசித்து வரும் அவரது மாமனார் ஷாஜகான் ஆகியோர் நகை வியாபாரத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார். அதை நம்பி ஃபெரோஸ் தன்னிடமிருந்த 1.3 கிலோ தங்க நகைகளை உடனடியாக விற்பனை செய்து தருமாறும் அவர்களிடம் கொடுத்துள்ளார்.
நகைகளை வாங்கி 15 நாட்களுக்கும் மேலாகியும், நகை விற்ற பணத்தையும் அளிக்காமலும் அத்தோடு கொடுத்த நகைகளை திருப்பி அளிக்காமலும் இருந்ததால் சந்தேகமடைந்த ஃபெரோஸ். அவர்களை அழைக்க முயற்சி செய்தபோது இருவரின் மொபைலும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் நேற்று முன் தினம் ஃபெரோஸ் புகார் அளித்தார். அதனடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு இருவரையும் வலைவீசி தேடிவந்தனர்.