சென்னையில் பிரபல தனியார் உணவக உரிமையாளர் பொன்னுச்சாமி என்பவர் நேற்று (அக்.22) அடையாறு காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், தான் நாளிதழ் ஒன்றில் கண்ட வட்டியில்லா கடன் விளம்பரத்தையடுத்து சுரேஷ்(43) என்பவரை தொடர்புகொண்டு பேசினேன். தொடர்ந்து தனியார் நட்சத்திர விடுதி ஒன்றிற்கு அவரைக் காண சென்றபோது, அவர் தனக்கு தெரிந்தவர்கள் பெரிய பணக்காரர்களுக்கு பினாமிகளாக உள்ளனர். அவர்களிடம் உள்ள பலகோடி மதிப்பில் கருப்பு பண எப்போது வேண்டுமானாலும் வட்டியில்லாதக் கடனாகப் பெறலாம்.
தற்போது உனக்கு தொழில் செய்வதற்காக தேவையான ரு.4 கோடியை வட்டியில்லாமல் நான் பெற்று தருகிறேன் என வாக்குறுதியளித்ததோடு அந்த அறையில் கட்டுக்கட்டாக மறைத்து வைத்திருந்த பணத்தையும் காட்டினார். ஆனால், பெறும் ஆறு மாதங்களில் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி திருப்பி தர வேண்டும் எனவும், பணம் வாங்கும் முன் அதற்கான அக்ரீமெண்ட் செலவுகளுக்காக மட்டும் முன்பணமாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் எனக்கூறி தன்னை நம்பவைத்ததுடன் அடையாறு சிக்னல் அருகே உள்ள ஒரு ஜூஸ் கடைக்கு தன்னை நேரில் வரவழைத்து அங்கு வைத்து தன்னிடம் அக்ரீமெண்ட் செலவுக்கான ரூ.5 லட்சம் முன்பணத்தை பெற்றுச் சென்றார். அதன்பின் ஏமாற்றி விட்டார். ஆகவே தலைமறைவாகிய சுரேஷை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
பல குற்றப்பின்னணியில் தொடர்பு:அதனடிப்படையில் மோசடி வழக்குப்பதிவு செய்த அடையாறு போலீசார் தனிப்படை அமைத்து பொன்னுசாமியிடம், சுரேஷ் பணம் பெற்றுச் சென்றதாக கூறப்படும் அடையாறு சிக்னல் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது சுரேஷ், ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டு செம்மரக் கடத்தல் வழக்கில் கோவை பீளமேடு போலீசாரால் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புக் காவலில் சிறையில் ஓராண்டு அடைக்கப்பட்டு பின் வெளியே வந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கோவை விரைந்த தனிப்படை போலீசார் கோவை அன்னூர் பகுதியில் பதுங்கியிருந்த சுரேஷ்குமார் என்பவனை சுற்றி வளைத்து கைது செய்து அவனை சென்னை அழைத்து வந்தனர்.